ராஜபக்ஷர்களை புகழ்பாடியவர்கள் புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்

257 0

பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி முழு நாட்டு மக்களையும் மந்த போசணை நிலைக்குள்ளாக்கியமைக்கு ராஜபக்ஷர்கள் மாத்திமல்ல. அவர்களுடன் ஒன்றிணைந்திருந்த சகலரும் பொறுப்புக்கூற வேண்டும்.

ராஜபக்ஷர்களை லீ குவான் யூ, மஹதீர் மெஹமட் என புகழ்பாடியவர்கள் தற்போது ‘மேலவை இலங்கை கூட்டணி’யை உருவாக்கி புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள்.

இவ்வாறானவர்களை நாட்டு மக்கள் அரசிலில் இருந்து முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஊடாக தீர்வு வழங்க முடியும்,அதற்கு தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கை, பிரச்சினை ஆகியவற்றுக்கு நிலையான தீர்வினை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் 07 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இளம் தரப்பினர் கிரிகெட் விளையாட்டை சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார்கள். ஆசிய கிண்ண கிரிகெட் போட்டியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணிக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலலையும் இளம் தரப்பினரிடம் ஒப்படைக்குமாறு நாட்டு மக்களிடம் மீண்டும் வலியுறுத்துகிறேன். மந்த போசணை தொடர்பிலான சபை ஒத்தி வைப்பு விவாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 வயதிற்கு குறைவான 55,000ஆயிரம் பிள்ளைகள் உள்ளார்கள்.இந்த எண்ணிக்கையில் 10 சதவீதமானோர் மந்தபோசணை அல்லது ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் அறிக்கையிட்டுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக 11 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளார்கள்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நூற்றுக்கு 10 சதவீதமாக காணப்பட்ட மந்த போசணை அல்லது ஊட்டச்சத்து குறைப்பாடு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் 17 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

எமது மாவட்டத்தை பொறுத்தவரை கர்ப்பிணி தாய்மாரின் உரிய காலத்திற்கு தேவையான நிறை குறைவடைந்துள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.போசணை குறைப்பாடு உள்ள பிள்ளைகளுக்கு வழங்கும் பகலுணவுக்காக 30ரூபா ஒதுக்கப்பட்டது,தற்போது அத்தொகை 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு முறையாக கிடைக்கப்பெறுவதில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து நாட்டு மக்களை மந்தபோசணைக்கு கொண்டு சென்ற தரப்பினர் தற்போது புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கு கூற வேண்டியவர்கள் தற்போது மேலவை இலங்கை கூட்டணி என்பதொன்றை உருவாக்கியுள்ளார்கள்.

லீ குவான் யூ,சிங்களே என குறிப்பிட்டவர்கள், வைத்தியர் சாபி தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் தற்போது புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள். நாட்டு மக்கள் இவர்களுக்கு ஏமாற கூடாது.பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் மாத்திமல்ல இவர்களும் பொறுப்பு கூற வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டுக்கு வருகை தந்துள்ளமை ஒரு வழியில் நல்லது,இல்லாவிடின் மஹிந்த சுழங்கவை போல் கோட்டா சுழங்கவையும் ஆரம்பித்திருப்பார்கள்.தற்போதைய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானத்துடன் இருக்க வேண்டும்.

மந்த போசனைக்குள்ளாகியுள்ள பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத நிலையில் உள்ள போது தீக்கிரையாகிய வீடுகளுக்கான நட்டஈட்டை அரசியல்வாதிகள் இரட்டிப்பாக்கியுள்ளார்கள்,ஒரு வீட்டுக்கு பதிலாக இரு வீடு,மதிப்பீட்டாளர் நெருக்கடிக்குள் என பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளன.

நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும்.தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கும்,நீண்ட கால கோரிக்கைகளுக்கும் நிலையான தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றார்.