இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற இடங்கள் – வரைபடத்தை வெளியிட்டது சர்வதேச அமைப்பு

177 0

உள்நாட்டு மோதலின் போது ( 1983- 2009) இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற பகுதிகளை சுட்டிக்காட்டும் வரைபடமொன்றை   கனடாவை சேர்ந்த பொதுநல பரப்புரை நிலையம்  The Public Interest Advocacy Centre என்ற  அமைப்பொன்று வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஆயிரக்கணக்கான மனித உரிமை மீறல்களை திகதிகள் பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களின் பெயர்கள்  இடம்பெற்ற இடம் போன்ற விபரங்களுடன் தெரிவிக்கும் வகையில் இந்த வரைபடம் காணப்படுகின்றது

இந்த வரைபடம்  மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த ஐநாவின் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளிற்கு அவசியமான அடிப்படை ஆதரவை வழங்குகின்றது.

இது தொடர்பில்  மேலும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது

இலங்கையின் சமீபத்தைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் பொறுப்புக்கூறல்கள் இல்லாததை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதலை வெளிப்படையாக அவதானிக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவர்களிற்கும் உண்மை நீதி மற்றும் இழப்பீட்டிற்கான உரிமைகள்  மறுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 வது அமர்விற்கு முன்னதாக-இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரி;ன் அறிக்கை வெளியாகியுள்ள இந்த தருணத்தில்  மோதல்கள் குறித்த இந்த வரைபடம் மனித உரிமை மீறல்களின் அளவு பரவலான தன்மை பொறுப்புக்கூறலின் அவசியம்  போன்றவற்றை உரிய நேரத்தில் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

வரவேற்கத்தக்க விதத்தில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கடந்த வருட தீர்மானம்; பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்காக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்த  ஆதாரங்களை ஆராய்ந்து சேகரித்துவைப்பதன் அவசியத்தை அங்கீகரித்திருந்தது.

இலங்கையில் பொறுப்புக்கூறலிற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் இந்த் ஆணையை தொடர்வதும் மேலும் விஸ்தரிப்பதும் அவசியமானது.

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை முடிவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் அதேவேளை இன்னமும் பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என்பதை மனித உரிமை ஆணையாளரின் சமீபத்தைய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த மோதல் வரை படம் சர்வதேச மட்டத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுத்துச் செல்வதற்கும் மற்றும் தங்கள் சொந்த உத்திகளை பின்பற்றுவதற்கும் ஐநா மற்றும் உறுப்புநாடுகளிற்கு துணைபுரியும்.

இலங்கையின் கடந்த கால மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் தொடர்ந்தும் கரிசனையையும் அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றது என தெரிவித்துள்ள பிஏஐசி அமைப்பின் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலிற்கான இயக்குநர் டானியலா கவ்சன் இன்னமும் எவ்வளவு குறிப்பிடத்தக்க பணிகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது என்பதை இந்த வரைபடம் வெளிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல் வரைபடம் ஒரு சிறந்த ஆராய்ச்சி கருவி பிராந்தியம் காலம் மற்றும்  வன்முறைகளின் வகைகள் அடிப்படையில் இலங்கை சமுகத்தில் மோதலின்  அளவு தாக்கத்தை பயனாளாகள் அறிந்துகொள்ளக்கூடிய விதத்தில் இது காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.