கனடா மார்க்கம் மாநகர முதல்வர் frank Scarpiti க்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு கனடா மார்க்கம் மாநகர சபையில் நடைபெற்றது.
இவ் கலந்துரையாடலில் இரண்டு மாநகர சபை முதல்வர்களும் தங்களுடைய மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர்.
இச் சந்திப்பின் போது யாழ்.மாநகர முதல்வர் இலங்கை அரசாங்கம் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்றார்கள்.
அவர்களின் அந்த நீண்ட கால கோரிக்கைக்கு மதிப்பளித்து கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கைத் தரும் வகையில் அமைந்தது. அதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
எமக்கான நீண்டகால அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் ஒரு சமஸ்டி முறையிலான தீர்வினைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் நீங்கள் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்றார்.
தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டங்கள், மற்றும் போரினால் பாதிக்கப்பட தமிழ்மக்களை தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் நலிவடையச் செய்துள்ளமை தொடர்பிலும், பெண் தலமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதா பிரச்சனைகள் தொடர்பிலும் கனடா மாநகர முதல்வருக்கு யாழ்.மாநகர முதல்வர் விளக்கமளித்தார்.
யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தென் ஆசியாவின் சிறந்த பொது நூலகம் எரியூட்டப்பட்டமை, யாழ்.மாநகர சபை கட்டடம் முற்றாக தகர்க்கப்படமை போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டிய மாநகர முதல்வர், இவ்வாறு நீண்ட போரினால் சிதைக்கப்பட்ட எங்களுடைய பிரதேசங்களைக் கட்டியெழுப்புதற்கு தாங்கள் உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் யாழ்.மாநகர சபையுடன் தங்களுடைய அனுபவ ரீதியான பகிர்வுகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கனடா மார்க்கம் மாநகர முதல்வர் இன் அழைப்பினை ஏற்று கனடா மார்க்கம் மாநகர சபைக்கு யாழ்.மாநகர முதல்வர் விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் இச் சந்திப்பின் முடிவில் கனடா மார்க்கம் மாநகர முதல்வர் frank Scarpiti இனை யாழ்ப்பாணத்திற்கு வருமாறு யாழ்.மாநகர முதல்வர் அழைப்பும் விடுத்தார்

