தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழா- 314 பேருக்கு விருதுகள்

210 0

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

இவ்விழாவில் 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இதேபோல் சின்னத்திரை விருதுகள் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை சிறந்தநெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த வாழ்நாள் சாதனையாளர்கள், சிறந்த கதாநாயகன் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008-09-ம் கல்வியாண்டு முதல் 2013-14-ம் கல்வியாண்டு வரை பயின்றவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களின் மூலம் சிறந்த இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், படம் பதனிடுபவர்கள் என 30 பேருக்கு விருது வழங்கப்பட்டது. மொத்தம் 314 பேருக்கு ரூ.52.75 லட்சம் மதிப்புள்ள காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.