வைத்திய துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி மாற்றம்!

174 0

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதுடன், சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மருந்துத் தட்டுப்பாடு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்குவதற்கான அவசர பொறிமுறைமை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மருந்துகள் உட்பட சுகாதாரத் துறையின் ஏனைய தேவைகள் பற்றி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு, மருத்துவ விநியோகப் பிரிவு, அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய ஔடத ஒழுங்குமுறை ஆணையம் போன்றவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் உள்ள குறைபாடுகளை சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. எனவே, சுகாதார அமைச்சினால் ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமித்து மாதாந்த முன்னேற்ற மீளாய்வைப் பெறுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் குறைபாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக கடந்த ஐந்தாண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய தொழில்நுட்பக் குழுவொன்றை நியமிக்கவும் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மருந்துகளுக்கான செலவில் கிட்டத்தட்ட 40% புற்றுநோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

புற்று நோயாளர்களுக்கான மருந்துகள் மற்றும் இன்சுலின் தட்டுப்பாடு காணப்படுவதாகவும், உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மருந்துகளின் விலையேற்றம் இன்று நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் முனைப்புடன் முடிவெடுக்க வேண்டியதன் அவசியமும், மருந்துகளின் விலை உயர்வடைவதன் காரணமாக நோயாளிகள் மருந்து உட்கொள்வதை தவிர்த்தல் மற்றும் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வருகை தருவது அதிகரிப்பதாலும் ஏற்படக்கூடிய பிரச்சினை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை மற்றும் ஜயவர்தனபுர வைத்தியசாலை ஆகியவற்றின் வசதிகளை விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் முழு சுகாதாரத் துறையிலும் கொள்கை ரீதியான மாற்றத்தின் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

வைத்தியர்களுக்கான மேலதிக கடமை கொடுப்பனவுகள் வழங்குதல், வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளை மீளமைத்தல், வெளிநாட்டு விடுமுறை தொடர்பான அரச நிர்வாக சுற்றறிக்கை தொடர்பிலும் மற்றும் அரச சேவை நிபுணர்களுக்கு வரிச் சலுகைகளுடன் மின்சார (இலொக்ட்ரனிக்) வாகனங்கள் இறக்குமதி தொடர்பிலான ஆலோசனைகளையும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

இலங்கையில் மருத்துவச் சுற்றுலாவின் அறிமுகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் ஜனாதிபதி அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

ரஜரட்ட, பேராதனை, கராப்பிட்டிய போன்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தரங்களையும் தரமுயர்த்துவதற்கான தொழில்சார் அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாகவும், பல்கலைக்கழகங்களினால் அவ்வாறான பாடநெறிகள் தொடரப்பட்டாலும் சுகாதார அமைச்சின் சேவை யாப்பில், அவை அனுமதிக்கப்படாமையால் அது தொடர்பில் அரசாங்கம் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் மற்றும் வைத்தியர்களின் சேவை யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டன.

வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அந்நிய செலாவணியை அனுப்புவதில் உள்ள சிரமங்களை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியது. இதன்போது இந்த நாட்டில் உயர்கல்வி கொள்கைகள் அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வை.வி.என்.டி. சிறிசேன மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.