மத்திய குழு தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடிய அதிகாரத்தை தவசாளருக்கு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இவ்வாறான அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்குவதன் மூலம் கட்சியின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டு சுதந்திர கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போது கட்சியின் யாப்பு திருத்தம் அதன் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த திருத்தத்திற்கு கட்சியின் பல முக்கியஸ்தர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க , பொருளாளர் லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பல பாராளுமன்ற குழுக்களை சேர்ந்தவர்கள் இதற்கு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் கட்சிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பிளவுகளுக்கு இடமளித்து விடக் கூடாது என்பதற்காக பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த யாப்பினை நிறைவேற்றுவதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண மற்றும் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்டோர் தாம்மால் தனிப்பட்ட ரீதியில் இந்த யாப்பினை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நேரடியாகவே தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் சு.க. சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில்,
‘கட்சி தவிசாளருக்கு எந்தவொரு உறுப்பினரையும் நீக்கக் கூடிய அதிகாரம் கொண்ட யாப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. எனினும் பேராசிரியர்கள் குழு அதற்கு இணக்கம் தெரிவித்தது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் காணப்பட்ட ஜனநாயகம் தற்போது இல்லாமலாக்கப்பட்டுள்ள கவலைக்குரியது.’ என்றார்.
பொருலாளர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கையில் , ‘தற்போது கட்சி யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வது மக்களுக்கு எந்த வகையிலும் முக்கியத்துவமுடையதாக இருக்காது. மக்கள் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை எதிர்பார்க்கின்றனரே அன்றி , கட்சி யாப்பு திருத்தங்களை அல்ல. இவ்வாறான நிலையில் மக்களுக்கு தேவையற்ற தீர்மானங்களை எடுப்பதும் அவர்களால் கட்சி புறக்கணிப்படுவதற்கான பிரதான காரணியாக அமையும். ‘ என்றார்.
தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவிக்கையில் , ‘எவ்வாறான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டாலும் மீண்டும் கட்சிக்குள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம். ஜனநாயகத்தையே இன்று அனைவரும் மதிக்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டே மக்களின் ஆதரவையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.’ என்றார்.

