புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நீக்கமும் முதலீடும்

312 0

உலகத்தமிழர் பேரவை உட்பட 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், 317  தனிநபர்கள் மீதான தடையை நீக்கியதுடன் 3 இஸ்லாமிய அமைப்புக்களை 55 தனிநபர்களை தடைப்பட்டியலில் புதிதாக இணைத்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளமைக்கு எதிராக பேரினவாத கடும்போக்கு சக்திகள் குரல் எழுப்புகின்றன.

தடை விதிக்கப்பட்டு நீக்கியதற்கு பாதுகாப்பு அமைச்சு விளக்கம் தரவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியுமான சரத் பொன்சேகா இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், இதற்குரிய காரணத்தை பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தவேண்டும் என்கிறார்.

அரகல போராட்டத்துக்கு புலம்பெயர் தமிழர்களும் ஆதரவு என அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், காலி முகத்திடல் பண்டாரநாயக்கா சிலையின் கண்களை கறுப்பு துணியால் மூடிக்கட்டியதில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கும் தொடர்பு என சுதந்திரக்கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகராவும் கூறியுள்ளனர்.

2009 யுத்தம் முடிவுற்றதும் 2012 மகிந்த ஆட்சியில் 16 தமிழ் அமைப்புக்களை 424 தனிநபர்களை பயங்கரவாதத் தொடர்பு என்று தடை விதிக்க 2015 இல் மைத்திரி- ரணில் ஆட்சி இத்தடையை நீக்கி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் சில புலம்பெயர் அமைப்புக்களை சந்தித்து நாட்டுக்கு வர அழைப்பு விடுத்தார். கொழும்பில் புலம்பெயர் அமைப்பு அலுவலகம் திறக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

2021 பெப்ரவரி கோட்டாபய அரசு மீண்டும் தடை விதித்தது. 2021 செப்டம்பர் 22 ஐ.நா.பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டரஸை நியூயோர்க்கில் அவர் சந்தித்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறினார்.அப்போது எவருமே  எதிராக குரல் எழுப்பியதில்லை.

இன்று எதிர்ப்பவர்களும் அவரது ஆட்சியில் பங்காளிகள்.

2021 கோட்டாபய ஐ.நா.செயலரிடம் உறுதியளித்தபடி 2002 பதவி விலகும்வரையும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை பேச்சுக்கே அழைக்கவில்லை.

பொருளாதார நெருக்கடியை தீர்க்கவே புலம்பெயர் தமிழர்களை அழைப்பதாகவும், அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு நாடகமே என தமிழ்த்தரப்புக்கள் கூறுகின்றன.

பயங்கரவாதத்தை ஆதரித்தது அல்லது நிதி உதவி அளித்தது என்று அந்த நாடுகள் சிலரை பெயர்ப்பட்டியலிடலாம் என்ற ஜ.நா.1373 விதிமுறையை சர்வதேத நாடுகள் அங்கீகரிக்கவேண்டும். நிதி உதவி அளித்தது,பயங்கரவாதத்தை தூண்டியதற்கான ஆதாரங்களையும் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும்.அதற்கான காரணங்களையும் எம்மிடம் கேட்டறியவேண்டும்.ஆனால் அந்த நடைமுறைகளை இலங்கை அரசு பின்பற்றவில்லை என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஊடகங்களுக்கு கூறினார்.

அரச அனுசரணையோடு தமிழர்களை படுகொலை செய்தும் பல மில்லியன் ரூபா பெறுமதியான தமிழர்களின் சொத்துக்களை அழித்தொழித்தவர்கள் சர்வதேசத்துக்கு ஒன்றைக்கூறிவிட்டு தெற்கில் சிங்கள மக்களுக்கு பயந்து வேறு தகவலைக் கூறி நாடகம் ஆடுகிறார்கள். பொருளாதார நெருக்கடி தெற்கில் அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு ஏற்பட வடபகுதி மக்கள் ஒப்பீட்டளவில் குறைந்தளவே பாதிக்கப்பட்டனர்.

இதற்கு காரணம் வெளிநாடுகளின் நண்பர்கள்,உறவினர்கள் வழங்கும் அந்நியச்செலாவணியே எனவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.

2016 இல் தெற்கில் பெருவெள்ள அனர்த்தத்தில் பாதிகப்பட்ட மக்களுக்கு 25 கண் வைத்திய நிபுணர்களையும் பல் வைத்திய நிபுணர்களை மருத்துவ உபகரணங்களுடன் அனுப்பியபோது ஏற்றனர். கொவிட் காலம் 2.3 மில்லியன் ரூபா பெறுமதியான சுவாசக்கருவிகளை அனுப்புவதற்கு அனுமதி கேட்ட போது தடைப்பட்டியலில் இருப்பதால்  ஏற்க மறுத்தனர். இத்தடையால் இலங்கை அரசு 300 முதல் 500 மில்லியன் டொலர் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளது  எனவும் அவர் கூறினார்.

புலம்பெயர் மக்களையும் அமைப்புக்களையும் தடை செய்ததும் தடை நீக்கியதும் சட்டவிரோதம். ஐ.நா.விதிமுறைகளுக்கு மாறாக இவ்வமைப்புக்களும் தனிநபர்களும் தடைப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.தடையை பிறப்பிக்க முன்பு  அதற்கான காரணத்தை அவர்களுக்கு கூறியிருக்கவேண்டும். இதில் சட்டரீதியான செயற்பாடுகளை இலங்கை அரசு பின்பற்றவில்லை என்று  எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்ப்பவர்கள் அடுத்த தேர்தல்களில் இத்தடையை முக்கியத்துவம் அளித்து தெற்கில் பிரசாரங்களை முன்னெடுக்க ஒரு துரும்புச்சீட்டு கிடைத்துள்ளது.கடந்த தேர்தலில் மொட்டுக்கட்சியினர் யுத்த வெற்றியையும்,புலிகளை ஒழித்தததையும் தெற்கில் தீவிர பிரசாரம் செய்தே பெரும்பான் மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தனர். அரகல போராட்டத்தால் மக்களின் ஆதரவை  இழந்து தவிக்கிற இத்தருணத்தில் இத்தடை நீக்கமானது  இவர்களுக்கு மருந்துக்கு தேன் கிடைத்தமாதிரி என்கிறார் மற்றொரு புலம்பெயர் அமைப்பின் பிரமுகர்.

பொருளாதார நெருக்கடிக்கு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களை இங்கு முதலீடுகளை செய்யுமாறும்  நாட்டுக்கு வருவதற்கான அச்சம் நீக்கப்படும்  எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தடை நீக்கும் ஜூலை 28 வர்த்தமானி அறிவித்தல் வருமுன் கட்சித் தலைமையகமான சிறிகோத்தாவில்  ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் அவரின் சார்பில் சில சிறுபான்மை அரசியல்வாதிகளிடம் கோரியிரு ந்தார்.

1983 கறுப்பு ஜூலை கலவரம் ஜனாதிபதி ரணில் அமைச்சர். மாமானார் ஜே.ஆர்.ஆட்சியில்  தமிழர்களுக்கு சொந்தமான பல தொழிற்சாலைகள்  நிறுவனங்கள் வர்ததக நிலையங்கள் எரிக்கப்பட்டு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவற்றில் பணிபுரிந்த ஆயிரக்கணக் கான சிங்களவர்களே வேலை இழந்ததை  ரங்கே பண்டார மறந்திருக்கமுடியாது.

2019 ஏப்ரல் குண்டு வெடிப்பை தொடர்ந்து கட்டார் நாட்டு தொண்டு நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பு என அரசு தடை செய்திருந்தது. எரிபொருள் தட்டுப்பாட்டால் கட்டாரின் உதவி தேவைப்பட்டு அத்தடையை அரசு நீக்கியதும் வன்னி எம்.பி.செல்வம் அடைக்கலநாதன் ஏனைய புலம்பெயர் அமைப்புகளின் தடையையும் நீக்கினால் பொருளாதார சிக்கலுக்கு  முதலீடு செய்வதற்கு முன்வருவார்கள் என்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிரு ந்தார். அதுவரையும்  தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து அரசு சிந்திக்கவில்லை.

வடமராட்சி-திக்கம் வடிசாலையின் உற்பத்தி பணிகளை ஆரம்பிக்க பனை அபிவிருத்திச் சபை  தெற்கில் உள்ள ஒரு மதுபான  நிறுவனத்துக்கு    (டிஸ்ரிலறி ) 25 ஆண்டுகளுக்கு வழங்கியதால் திக்கம் வடிசாலையில் தமிழர்கள் தொழில்புரிய முடியாத நிலைமையே ஏற்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு அத்திட்டம் கைவிடப்பட்டது. பனை அபிவிருத்திச்சபைக்கு கோட்டாபய அரசு பனை வளம் குறித்து அறிந்திராத  பெரும்பான்மை இனத்தவரை தலைவராக நியமித்துள்ளதால் திக்கம் வடிசாலையை தெற்கின் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தார். புலம்பெயர் தமிழர் இதனை செயற்படுத்த அனுமதிப்பார்களா.

கிழக்கில் ஒரு அபிவிருத்தியை ஆரம்பிக்க அனுராதபுரத்தில் அமைச்சரிடம் அனுமதி பெறவேண்டியுள்ளது. 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாத தமிழர்களின் உரிமைசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால் வெளிநாடுகளில் உள்ள  13 லட்சம் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என இரா.சாணக்கியன் எம்.பி நோர்வேயில் கூறியிருந்தார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் அந்த நாடுகளில் பல நிறுவனங்களின் உரிமையாளர்களாக,செல்வந்தர்களாக, தொழிலதிபர்களாக உள்ளனர். இங்கு முதலீடுகளை ஆரம்பிக்க  வடக்கு கிழக்குக்கு வெளியே தெற்கில் மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டதாக  தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி.மட்டக்களப்பில் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள சிங்களவர்களே கோட்டாபயயவை  நம்பாதிருக்கும்போது  தமிழர்கள் எப்படி நம்புவார்கள்  புலம்பெயர் தமிழர்களை தடை செய்த கோட்டாபய தற்போது அவர்களை பொருளாதார உதவிக்கு அழைப்பது சிரிப்பாக உள்ளது. கோட்டாபய பதவியில் இருக்கும் வரை மத்திய கிழக்கில் ஏற்றுமதி தொழில் செய்யும் சிங்களவர்களும் அவருக்கு ஆதரவாக செயற்படமாட்டார்கள் என மனோ கணேசன் எம்.பி. கூறியிருந்தார்.

தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்படுகின்றனர்.அதனால் அவர்கள் அச்சத்தால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தமது முதலீடுகளை

தொழில்களை ஆரம்பிக்கின்றனர்.இங்கு எப்படி ஆரம்பிப்பார்கள் என மறைந்த முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்ட சம்பவங்களில் இன்றும் மறக்கமுடியாதது பிரபல சீனி இறக்குமதி வர்த்தகரும் அவுஸ்திரேலிய பிரஜையுமான

(Kala Traders (Pvt) Ltd. 151, Dam Stret, Colombo-12 ) நடராஜா சிறிஸ்கந்தராஜா ( சீனி முதலாளி ) 20 ஜூலை 2006 கடத்தப்பட்டு காணாமல் போனது. மனைவிக்கு தொலைபேசியில் 60 இலட்சம் ரூபாவை கொடுத்தால் விடுவிக்கப்படுவார் எனக்கூறப்பட்டது.

கப்பம் கோரிவர்கள் கூறியபடி அப்பலோ மருத்துவமனைக்கு அருகில் மஞ்சள் ரீ சேட் கறுப்பு காற்சட்டை அணிந்தவரிடம் மனைவி பணத்தைக் கையளித்தார்.ஆனால் கணவர் விடுவிக்கப்படவில்லை. கணவரின் வாகனம் (இல 251-7242) கிழக்கில் வெலிக்கந்த இராணுவ முகாம் அருகில் கைவிடப்பட்டிருந்தது. மனைவி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் தனது கணவனை தேடித்தருமாறு 2006 ஒக்டோபர் 10 கடிதமூலம் கோரியிருந்தார். கறுவாக்காடு பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்திருந்தார். இந்த வழக்கு கொழும்பு நீதிவான் முன்னிலையில் நடைபெற்றது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சில தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை, படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களின் காணிகள் விடுவிப்பு,வடக்கு கிழக்குல் தமிழ் மக்களின் துன்புறுத்தல்களுக்கு முடிவு,சமூகங்களுக்கு இடையில் நல்லுறவை வலுப்படுத்தல் போன்றவை நிறைவேற்றப்படவேண்டும் என்றும் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.அவை நிறைவேறுமா.