சடலங்களை புதைப்பதிலும் அரசியலா?

171 0

2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணய செயற்பாடுகளால் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கிடையே பல முரண்கள் உருவாகியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இறந்த ஒருவரை புதைப்பதற்கும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

இறந்தவரின் சடலத்தை வைத்துக்கொண்டு அவரை எந்த உள்ளூராட்சி சபையின் எல்லையில் புதைப்பது என உறவினர்கள் தவித்துப்போயினர். இவ்விவகாரத்தில் மனிதாபிமானம் எங்கே போனது என பலரும் முகஞ்சுழித்தனர்.

இறுதியில் இரு உள்ளூராட்சி சபைகளினதும் எல்லைக்குள் இல்லாது, அருகில் உள்ள தோட்ட மயானத்தில், தோட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று தமது உறவினரின் சடலத்தை நல்லடக்கம் செய்துள்ளனர்.

அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களும் அறிவுபூர்வமானதாக இருப்பதில்லை என்பதற்கு இந்த எல்லை மீள்நிர்ணய செயற்பாடுகளே உதாரணமாக விளங்குகின்றன.

ஒரு உள்ளூராட்சி பிரதேசத்தில் சிறிய அளவான பகுதி எங்கோ வேறிடத்தில் காரியாலயத்தைக் கொண்டிருக்கும் ஒரு சபையுடன் இணைக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள ஒரு சில குடும்பங்களின் தேவைகளை சகல மட்டங்களிலும் ஈடு செய்ய முடியாத சூழ்நிலைகள் அந்த சபைக்கு எழுந்துள்ளன.

ஒரு சிறிய பகுதிக்காக கழிவகற்றும் செயற்பாடுகளிலிருந்து சகல விதமான சட்டபூர்வமான விடயங்களுக்கும் எங்கோ தொலைவில் உள்ள உள்ளூராட்சி சபை பொறுப்பும் பதிலும் வழங்க வேண்டும்.

எல்லைகள் பிரிக்கப்படுவதற்கு முன்பாக தமது பிரதேசத்திலுள்ள உள்ளூராட்சி சபை காரியாலயத்துக்கு நடந்து சென்று சேவைகளைப் பெற்றுக்கொண்ட மக்கள் இப்போது இரண்டு பஸ்கள் பிடித்து தமது எல்லைக்குரிய காரியாலயத்துக்கு அலைந்து திரிய வேண்டியுள்ளது.

இந்த எல்லை பிரச்சினைகளால் மயானங்களும் பிரிக்கப்பட்டுள்ளதாக சபை தவிசாளர்கள் கூறுகின்றனர்.

அருகில் மயானம் இருந்தும் அது தமக்குரிய எல்லைக்குரியது இல்லை என அதிகாரிகள் கர்ஜிப்பதால் சடலத்தையும் தூக்கிக்கொண்டு மக்கள் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

இப்போது இந்த எல்லை மீள்நிர்ணயத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பலருக்கு தலையிடிகளை கொடுத்து வருகின்றன.

அரசியல் ,சட்டம் , அதிகாரம் இவை எல்லாவற்றையும் ஒரு பக்கம் வைத்து விட்டு முதலில் அரசியல்வாதிகள் மனிதாபிமானத்தோடு இவற்றை அணுக வேண்டியுள்ளது.

சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் கீழ் பொது மயானங்கள் அல்லது தகனசாலைகள் இருக்கின்றன. பிரதேச சபையோ அல்லது நகர சபையோ தமது எல்லைக்குட்பட்ட பகுதி வாழ் மக்கள் என்றால் ஒரு தொகையையும் அதற்கு வெளியே வாழ்ந்து வரும் மக்களில் எவராவது மரணத்தைத் தழுவி விட்டால் நல்லடக்கம் செய்வதற்கோ அல்லது தகனக்கிரியைகளுக்கோ ஒரு தொகையை அறவிட்டு வருகின்றன.

ஆனால் இத்தனை காலமும் எல்லைப் பிரச்சினைகளை காரணங்காட்டி இறந்தவர்களின் நல்லடக்கம் செய்வதற்கோ தகனம் செய்வதற்கோ மறுப்பு தெரிவித்ததில்லை.

ஆனால் இப்போது எப்படி இந்த மனிதாபிமான பற்றாக்குறை ஏற்பட்டது?

இலங்கையிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குக் கீழ் பொதுமயானங்கள் மற்றும் தகனசாலைகள் பல உள்ளன.

அவற்றை பராமரிக்கவும் மக்களுக்கு ஏற்ற வகையில் அவற்றை பாதுகாக்கவுமே சபைகளுக்கு அதிகாரங்கள் உள்ளன.

யாரை எங்கு புதைப்பது அல்லது எரிப்பது என்ற சட்டங்கள் பேசுவது மனிதாபிமானமாகாது. ஒரு குடும்பத்தில் இறப்பு நிகழ்ந்தால் அது பல வகையில் பல்வேறு தரப்பினருக்கு சோகத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.

இப்படியான சூழ்நிலையில் இருக்கும் குடும்பத்தினரிடம், சடலத்தை புதைப்பதற்கு இடமில்லை என்று கூறுவது இன்னும் எத்தனை துயரத்தை உருவாக்கும்?

இந்த உலகில் அனைவருமே எப்போதாவது இறக்கத்தான் போகின்றனர். மரணம் எப்போதும் நிகழலாம். அதை நன்கு அறிந்து வைத்துக்கொண்டும் மனிதர்கள் இவ்வாறு நடந்து கொள்வது நாகரிகமல்ல.

இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களிடையே பல கட்சி ,தொழிற்சங்க பேதங்கள் காணப்படுகின்றன. தேர்தல் காலங்களில் இவர்கள் தாம் ஆதரவு தரும் பிரிவினரின் பக்கம் இருப்பர்.

உறவினர்கள் கூட இவ்வாறு பிரிந்து நின்று அரசியல் செய்வது இப்பகுதிகளில் சகஜமானதொன்று. தேர்தல்கள் முடிந்தவுடன் ஒரே குடியிருப்புத் தொகுதியில் தான் அவர்களின் வாழ்க்கை வழமை போன்று தொடரும்.

தொழிற்சங்க ,அரசியல் பேதங்களை மையமாக வைத்து இவர்கள் அடித்துக்கொள்வது கிடையாது. வெற்றியோ தோல்வியோ அது இரண்டு நாட்களுக்குத்தான் பேசுபொருளாக இருக்கும்.

ஒரு தோட்டத்தில் மரணம் ஏற்பட்டால் அங்கு அனைவரும் திரண்டு நிற்பர். இவர்களுக்குள்ள பக்குவம் கூட இன்று சில உள்ளூராட்சி சபை பிரமுகர்களுக்கு இல்லையென்றால் யாரை குறை சொல்வது? அரசியல் பதவிகள்,பொறுப்புகள்,அதிகாரங்கள் வாழ்நாள் முழுதும் எவருக்கும் இருப்பதில்லை.

அதை பலரும் உணர்ந்து கொள்ளல் அவசியம். அரசாங்கம் ஏதாவதொரு தேவைக்காகவும் தனது அதிகாரத்தை தக்க வைக்கவும் சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தவும் தான் எல்லை மீள்நிர்ணயத்தை செய்ததா என்று கேள்வி எழுப்பத் தோன்றுகின்றது.

காலங்காலமாக ஒரே பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து வாழ்கை நடத்தும் எவரையும், அரசியல் ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் எல்லைகளை வகுத்து பிரிக்கலாம்.

ஆனால் அவர்கள் காலங்காலமாக பின்பற்றி வந்த பாரம்பரியம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், மனிதாபிமானம் போன்ற விடயங்களை யாரால் பிரிக்க முடியும் அல்லது ஒழிக்க முடியும்?அரசியல்வாதிகள் முதலில் மனிதர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

சிவலிங்கம் சிவகுமாரன்