தமிழகத்தில் ஒரு நிரந்தரமான, நிலையான அரசு இல்லை. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த பின்னர் தற்காலிக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு, குழப்பங்களுக்கு அரசியல் சட்டப்படி, சட்டமன்ற, பாராளுமன்ற விதிகளின்படி நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் ஒரு வார கால அரசியல் நிலவரம் குறித்து ராகுல்காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது. சசிகலா, பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் காங்கிரஸ் கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை. அரசியல் சட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது.
வட மாநிலங்களில் நிலையாக இருந்த ஆட்சிகளை கலைத்து குறுக்குவழியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முயற்சித்தது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவிதமான அஸ்திவாரமும் இல்லாத நிலையில், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை மனதில் கொண்டு குறுக்குவழியில் கால்பதிக்க முயற்சி செய்கிறது.
கவர்னரை மத்திய அரசு நிர்ப்பந்திக்கக் கூடாது. அரசியல் சட்டப்படி எது நியாயம் என்று தோன்றுகிறதோ அதன்படி சுதந்திரமாக செயல்பட்டு, கவர்னர் விரைந்து முடிவு செய்ய வேண்டும். சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக உள்ளது என்பதை நிரூபித்து நிலையான அரசை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. ‘நீட்’ தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் மத்திய அரசை அணுக வேண்டும். தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நிலையான அரசு இருந்தால்தான் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற முடியும். இதற்கான முயற்சியை கவர்னர் விரைந்து எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் நிலையான அரசை ஏற்படுத்த கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கூறினார்.