முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ஜெ.தீபாவுக்கு ஆதரவு

267 0

‘ஆதரவாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் முடிவை மேற்கொள்வேன்’ என்று சென்னையில் ஆதரவாளர்கள் மத்தியில் ஜெ.தீபா பேசினார். நேற்று 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியலில் முழுமையாக குதிப்பது குறித்த அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24-ந்தேதி அறிவிக்கவிருப்பதாக அறிவித்து உள்ளார். அதனடிப்படையில் சென்னை தியாகராயநகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து ஆதரவாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கரூர் கண்ணன், பவானி பி.ஜி.நாராயணன், நிலக்கோட்டை ராமசாமி மற்றும் சேலம் மாவட்ட முன்னாள் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் வந்து ஜெ.தீபாவை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

காஞ்சீபுரம், திருப்பூர், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று மாலை ஜெ.தீபா பேசியதாவது:-

ஆதரவாளர்கள் அளித்துள்ள அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த கருத்துகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் முடிவை மேற்கொள்வேன். தமிழகத்தில் இன்றைய தருணத்தில் எதை சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

அரசியலில் குதிப்பதற்கு எனக்கு எந்த பயமும் கிடையாது, என்ன பார்த்து மற்றவர்கள் தான் பயப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் இருந்து வந்துள்ள உங்கள் அனைவரின் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழகத்தையும், தமிழர்களையும் மேம்படுத்த அனைவரும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஜெ.தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியலில் முழுமையாக ஈடுபடுவது குறித்த அறிவிப்பை பலரும் எதிர்பார்க்கின்றனர். அந்த அறிவிப்பை வரும் 24-ந்தேதி அறிவிக்கிறேன். அதற்கு பிறகு மாநிலம் முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளேன். இதற்கிடையில் பல்வேறு தடைகளும், மிரட்டல்களும் வருகின்றன. இதனால் தான் சுற்றுப்பயணம் காலதாமதமாகி வருகிறது. இருந்தாலும் திட்டமிட்டப்படி என்னுடைய அரசியல் பயணம் இருக்கும். இதில் எந்த மாற்றமும் இருக்காது.

தற்போதைய சூழ்நிலையில் முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பதா? தனிக்கட்சி தொடங்குவதா? என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.