தமிழர் பண்பாட்டு மரபுகளும் சுற்றுலாவும்

689 0

நமது தமிழினம் இற்றைக்கு பல நூற்றாண்டுகளைக் கடந்து வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு கடந்து வந்த பாதையினை திரும்பிப் பார்க்கின்ற போது எமது மரபுகளும் பண்பாட்டு அம்சங்களும் தனித்துவமானவையாகும்.அந்த வகையில் மரபுரிமை என்பது ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவத்தை அடையாளப்படுத்திக் காட்டும் விலைமதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த உருவமுள்ள மற்றும் உருவமற்ற சொத்தாகும். இவை கடந்த தலைமுறையிடம் இருந்து எமக்கு வழங்கப்பட்டதும், தொடர்ந்து பேணப்படுவதும்,  வருங்கால தலைமுறையினருக்கு பாதுகாத்துக் கையளிக்கப்பட வேண்டியதுமான அம்சமாகும்.

பொதுவாகவே ஒர் நாட்டின் மரபுரிமை அம்சங்களை கலாசார மரபுரிமை, இயற்கை மரபுரிமை என்று இரண்டாக வகுத்து நோக்குவர். இயற்கை மரபுரிமை அம்சங்களாக தாவரங்கள், மிருகங்கள்,புவியமைப்பு, தாதுப்பொருட்கள், பௌதீக நில, நீர் அம்சங்கள், மலைகள், குகைகள் என்று நோக்க முடியும். கலாசார மரபுரிமை அம்சங்களை தொட்டுணரக்கூடியவை என்றும் தொட்டுணர முடியாதவை என்றும் வகுக்கலாம். இவை ஒர் குழு அல்லது சமூகத்தால் பேணப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கப்பட வேண்டியவையாகும். அவற்றுள் கட்டங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், தொல்பொருட்கள், கலைப்பொருட்கள், சிலைகள், விளையாட்டுகள், உணவு முறைகள், வைத்திய முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், நாணயங்கள், அரண்மனைகள் என்பன அடங்குகின்றன.

பொதுவாக இலங்கைத் தொல்லியல் சட்டத்தின் அடிப்படையில் இற்றைக்கு நூறு ஆண்டுகளிற்கு முற்பட்ட பெறுமதியையுடைய அனைத்துச் சின்னங்களும் இந்நாட்டின் மரபுரிமைச் சின்னங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் இலங்கைத் தொல்லியல் திணைக்களம் 2010 லிருந்து வட இலங்கையிலுள்ள கண்ணுக்குப் புலப்படும் நூற்றுக்கணக்கான மரபுரிமைச் சின்னங்களை ஆவணப்படுத்தியுள்ளது. அவையாவும் மூவாயிரம் ஆண்டுகளிற்கு குறையாத வரலாற்றைக் கொண்டவையாகும்.

அந்த வகையில் ஈழத்தமிழரது மரபுரிமை அம்சங்களுக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு காணப்படுகின்றது. இவற்றை இலங்கையினுடைய பல பாகங்களில் காலகாலமாக மேற்கொண்ட தொல்லியல் அகழ்வாய்வுகளும் மேலாய்வுகளும் எடுத்தியம்புகின்றன. தமிழ்ப் பண்பாடானது இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்களது வாழ்க்கையுடன் வேரூன்றி உள்ளது. கடந்த முப்பது ஆண்டுகாலமாக இலங்கையின் அரங்கேறிய உள்நாட்டுப் போரால் ஏராளமான வெளிநாட்டு இடப்பெயர்வுகள் இடம்பெற்றன. இதனால் தமிழர்தம் மரபுரிமைகள் மறைந்து போகவும் மறந்து போகவும் காரணமாகின. தற்கால மக்களிடையே நமது பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றியும் மரபுரிமைச் சின்னங்கள் பற்றியும் தெளிவான விளக்கங்களும் விழிப்புணர்வுகளும் காணப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். வியாபார நோக்கம், அரசாங்கத்தின் பக்கச்சார்பு, தொழில்நுட்ப மோகம், மேலைத்தேய நாகரீகமோகம், ஆய்வுகளை மேற்கொள்ளவதற்கான போதிய வசதி வாய்ப்புகள் இல்லாமை போன்ற காரணங்களால் மரபுரிமை அம்சங்கள் பல புகைப்படர்ந்தும் வலுவிழந்துமுள்ளன. ஆயினும் தமிழர் தம் மரபுகள் மறக்கப்படும் அளவிற்கு மறைந்து போய்விடவில்லை.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கமைய எமது தேசத்திற்குள் பண்பாடும் மரபுரிமைகளும் நகர்ப்புறங்களில் வலுவிழந்த போதும் கிராமப்புறங்களில் ஓரளவு தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கின்றன. தொட்டுணர முடியாத மரபுரிமைகளை இலங்கை வரும் உல்லாச சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு புலப்படுத்துவதன் மூலம் அவற்றிற்கு புத்துயிர் ஊட்டப்படும். எமது மரபுரிமை அம்சங்களை காணும் சுற்றுலாப் பயணிகள் எமது பண்பாட்டோடு ஒன்றிணைந்து பயணிப்பதைக் காணலாம். குறிப்பாக நல்லூர் திருவிழாக் காலங்களில் வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் தமிழர் பண்பாட்டோடு இணைந்த வகையில் சாறி,வேட்டி அணிந்து பூமாலை சூடி, பொட்டு வைத்து தரிசிப்பதைக் காணமுடிகின்றது. கோலம்போடுதல், காதுகுத்துதல்,மூக்கு குத்துதல், பொன் ஆபரணங்களை அணிதல், எனப்பல சடங்குகள் நம் மரபுகளிலே பிண்ணிப்பிணைந்துள்ளன. கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பல்கனியாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடாகும். குறிப்பாக  நாடகக் கலைகள் நமது மண்ணோடும் நம்மோடும் தொடர்புடையவையாகும். நமதுபாரம்பரியத்தையும் அடிஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை ஆகும். கலைகள் சமூக வளர்ச்சிக்கும், மனஎழுச்சிக்கும் சிறந்த கருவியாகின்றன. பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் மாட்டுவண்டிச்சவாரி, காளையை அடக்குதல்,முட்டி உடைத்தல், ஆடுபுலியாட்டம், கிளித்தட்டு, பல்லாங்குழி, கொம்புமுறி விளையாட்டு, கொக்கட்டான்,கபடி,கயிறிழுத்தல், ஆலாப்பறத்தல்,ஊஞ்சல், உறியடித்தல் ஈ விளையாட்டுகளும் சின்னமேளம், கோலாட்டம், பின்னல் கோலாட்டம், பொம்மலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம்,குதிரையாட்டம்,புலியாட்டம்,அனுமானாட்டம், காத்தவராயன் கூத்து, காமன்கூத்து, உழவர் நடனம்,கம்பாட்டம்,வசந்தன் கூத்து, கோவலன் கூத்து, தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, பட்டிமன்றம் போன்ற கலை அம்சங்களும் ஈழத்தமிழர் பண்பாட்டில் தனித்துவமானவையாகும்.  நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின்ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே, தகவல் பரப்பும் ஊடகமாகவும்  பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன.

பண்டைய காலத்தில் தமிழர்கள் தமக்கென ஆரோக்கியமான ஓர் உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்தனர்.சித்தர்கள் உணவு முறை பற்றி குறிப்பிடுகையில், “எது உனக்கு உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும். எது உனக்கு மருந்தாக இருக்கிறதோ அதுவே உனக்கு உணவாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றனர்.  ஒரு வருடமாவது சூரியன் சஞ்சரிப்பதை அடிப்படையாக கொண்டு உத்தராயணம், தட்சிணாயனம் என்று இரண்டாக வகுத்து நோக்கப்படுகின்றது.

தைமாதம் முதல் ஆனி மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிகளையும் உத்தராயணம் என்றும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான காலத்தை தட்சிணாயணம் கொள்வர். இதில் உத்தராயணம் தைப்பொங்கலுடன் ஆரம்பமாகும்.தட்சிணாயணம் ஆடிப்பிறப்புடன் ஆரம்பமாகும். எனவே இவ்விரு காலங்களும் உணவுடன் தொடர்புடையதாய் பண்டிகைகளுடன் ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது. ஆனால் நவீனத்துவ உலகிற்கு சவாலாக விளங்கும் நோய்களான நீரிழிவு, இருதய நோய்கள், புற்றுநோய்கள் போன்றன வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான மக்களைப் பீடித்துள்ளன. ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைகளில் ஒன்றாக பிரதேசத்திற்குரிய பாரம்பரிய உணவு முறையை ஊக்குவித்தல் அமைகின்றது.

வேப்பம்பூ வடகம், வேப்பம்பூ பச்சடி, சித்திரைக்கஞ்சி, காய்ப்பிட்டு, இலுப்பைப் பூ துவையல்,கருப்பணிக்கஞ்சி,  இலைப்பிட்டு,தூதுவளை சூப், மொசுமொசுக்கை அடை, ஆடிக் கூழ், ஒடியற்கூழ், அரிசிமாக்கூழ், ஊதுமாக்கூழ், பனங்காய்ப்பணியாரம், ஆலங்காய்ப்பிட்டு, பிடிக்கொழுக்கட்டை, தட்டுவடை, எள்ளுப்பாகு, வாய்ப்பன், கீரைப்பிட்டு, பொரியரிசிமா, முட்டைமா, பனாட்டு, நுங்கு, திணை, சாமை, வரகரிசிச்சோறு, குரக்கன் கழி, குர்க்கன் பிட்டு போன்ற உணவுப்பாரம்பரியம் தொன்று தொட்டு நிலவின.

தமிழர்  சமூகம் நவீன நாகரீக மோகத்தால் துரித உணவில் நாட்டம் கொண்டு பாரம்பரிய உணவு முறைகளை மறந்து போகின்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது முன்பு எல்லோர் வீட்டிலும் வாழை மரங்கள் இருந்தன.  இத்தகைய பாரம்பரிய உணவுகள் இயற்கையான தாகவும் மலிவானதாகவும்  கிடைக்க கூடியனவாகும். அவ்வாறே வாழையிலை உணவு உண்ண பயன்படுத்த துவங்கியதாக கூறப்படுகின்றது.

தொடர்ந்து அந்த வாழையிலையில் சூடான உணவு போட்டு சாப்பிடுகையில், குளோரோஃபில் என்ற பதார்த்தம்  உணவுடன் கலந்து, உடலுக்கு ஊட்டச்சத்தை தருகின்றது.  உணவு முறைகளை பாரம்பரிய முறைப்படி மண்சட்டி,வாழையிலை, தாமரையிலை போன்றவற்றை பயன்படுத்தி பரிமாறும் தன்மையானது சுற்றுலாத்துறையில் மீளவும் புத்துயிர் பெற்றுகின்றது.இவற்றையே சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் விரும்புகின்றனர்.

சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் தமிழர்கள் பின்பற்றும் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றே மருத்துநீர் வைத்து நீராடலாகும். தாழம்பூ, துளசி,அறுகு, மாதுளம்பூ, வில்வமிலை,திப்பிலி, பால், மிளகு, மஞ்சள்,சுக்கு,பச்சைக் கற்ப்பூரம், கோமயம்,கோரோசணை, பீர்க்கு போன்ற மூலிகைச் சரக்குகள் இட்டுத் தயாரிக்கப்படும் மருத்துநீர் உடலுக்கு குளிர்ச்சியினை உண்டாக்கி தோல்நோய் வராமல் தடுத்து வெப்பகால பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றது.

 

குழந்தை வளர்ப்பிலும் தமிழர்கள் தொன்றுதொட்டு சில பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர்.  அவை குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கும் ஏற்பட்ட நோய்களை தீர்ப்பதற்கும் அதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

துடக்கு எனக்கூறி குழந்தையை பிறர் தீண்டாது பாதுகாத்தல், கண்ணூறு அல்லது நாவுறு கழித்தல், கையில் வசம்பு கட்டுதல்,திருஷ்டிப் பொட்டு வைத்தல், மூலிகை இலைஊகளை கொண்ட நீரில் குளிக்க வார்த்தல்,சாம்பிராணி புகை காட்டுதல்,கிரந்தி எண்ணெய் வைத்தல், காது குத்துதல்,தோஷம் என மாலையில் குழந்தையை வெளியே கொண்டு செல்வதைத் தடுத்தல், அக்கிக்கு சிங்கம் வரைதல், அம்மை நோய்க்கு வேப்பிலை கட்டுதல், என்பன அவ்வாறு குறிப்பிடத்தக்கனவாகும். எந்த ஒரு விடயமும் ஏதாவது ஒரு வகையில் நன்மை பயப்பதாக அமையாவிடின் மக்கள் அதைத் தொடர்ந்து பின்பற்ற விரும்ப மாட்டார்கள். ஆனால் தமிழர்களுடைய இத்தகைய நம்பிக்கைகள் மிகுந்த நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டு வருபவையாக இருக்கின்றன.அவற்றுள் சில விஞ்ஞான பூர்வமாக ஏற்புடையதாக இருப்பதுடன் அர்த்தம் நிறைந்ததனவாகவும் உள்ளன.

 

பூப்பெய்தும் பெண்கள் தொடர்பாகவும்  தமிழர்கள் ஓர் உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். பூப்பெய்தும் பெண்களைப் பார்க்கச் செல்லும் போதே தமிழர்தம் பாரம்பரிய பழக்கவழக்கங்களின் அடிப்படையில் நல்லெண்ணெய், முட்டை,ஊரரிசி போன்றவற்றைக் கொண்டு செல்வர்.  இவைதவிர ,கத்தரிப்பிஞ்சு,மீன், மஞ்சள், வேப்பிலை, எள்ளு, உழுந்து போன்ற உணவு வகைகளையும் பயன்படுத்துவர்.இவை யாவும் பிற்காலத்தில் பெண்களின் மகப்பேறிற்கு வலுச்சேர்பபனவாக உள்ளன.இவற்றை இன்றைய தலைமுறையினர் கடைப்பிடிக்கத் தவறியதனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு மருத்துவம் செய்வதற்காக ஏராளமானவர்கள் பல இலட்சம் ரூபாயை செலவு செய்து குழந்தைப் பேறிற்காக தவம் கிடக்கின்றனர்.

பாரம்பரியமாக செய்யப்பட்டு வரும் தொழில்களும் இன்று நமது மரபுகளாகவே காணப்படுகின்றன. இவை மக்களின் அன்றாட வாழ்வாதார அம்சமாக உள்ளன. அந்த வகையில் மட்பாண்டம் வனைதல், கயிறு திரிதல், செக்கு ஆட்டுதல்,ஒட்டுத் தொழிற்சாலை, பீடிசுற்றுதல், சுருட்டும் கைத்தொழில், கிடுகு பின்னுதல், ஒலைப்பெட்டி இழைத்தல், வலை பின்னுதல், மாட்டுக்கு டில் கட்டுதல், நெசவுத் தொழில், சாணை பிடித்தல், கைப்பொருள் விற்பனை, பனைமட்டை வியாபாரம், தள்ளுவண்டி வியாபாரம், பால் விற்பனை,கள்ளு இறக்குதல், ஓலைப் பெட்டி இழைத்தல்நெல்லுக்குற்றல், என அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

அந்த வகையில் தொகுத்து நோக்கும் போது மரபிழந்தவன் மரணித்தவன் என்பதற்கமைய தமிழர்களாகிய நாம் நமது மரபுரிமை களைப் பேணிப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்போமாக இருந்தால் நமது மரபுரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. அத்துடன் இவற்றை சுற்றுலாவில் உள்ளீர்த்துக் கொள்ளும் போது அவை பேணப்படுவதற்கும் வழியேற்படும்.இதனைக் கருத்திற் கொண்டே ICOMAS ஏப்ரல் 18 ஆம் திகதியை உலக மரபு நாளாக பிரகடனப்படுத்தி கொண்டாடி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

மகேந்திரநாதன் மோகனதாரணி