விருந்துகளையும், துலாபாரத்தையும் மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்- அண்ணாமலை

313 0

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாவட்டம் பேராவூரணி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் நடத்திய மொய் விருந்தில் 11 கோடி ரூபாய்க்கும் மேலே, மகசூல் அமோகம். இத்தனை பெரிய அறுவடையை நிகழ்த்திக்காட்டிய தனியார் இதுவரை யாரும் இல்லை. வாழ்வதற்கு வழியில்லாமல் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்விலே மீண்டு வர கடைசி வாய்ப்பு என்பது மொய் விருந்து நடத்துவது.

அதைத்தன் சுய லாபத்திற்காக, 100 ஆடுகள் மட்டன் குழம்பாக, குடல் கிரேவி, சிக்கன் ரோஸ்ட் என தடபுடலாக 8 ஆயிரம் பேருக்கும் மேலே விருந்து தூள் கிளப்ப, அசைவ சாப்பாடும், சைவ சாப்பாடும் பரிமாறி இருக்கிறார் அசோக்குமார். மொய் விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும், ஆயிரம் ரூபாயில் தொடங்கி 5 லட்சம் ரூபாய் வரை அவரவர் வசதிக்கு ஏற்ப மொய் செய்துள்ளனர்.

அங்கே தான் நிற்கிறது தி.மு.க.வின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை. இப்படித்தான் சமீபத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு எடைக்கு எடை மக்கள் வழங்கும் பணம் துலாபாரத்தில் வைக்கப்பட்டது. பணத்துக்கு எதிர்முனையில் தலைவர் அமர்ந்த தராசை ஒருவர் முட்டிக்காலால் முட்டுக் கொடுத்தது சமூக ஊடகத்தில் வைரல் ஆனது. மக்களையும், அரசையும் முட்டாளாக நினைக்கும் இவர்களின் கூட்டுக்கொள்ளைகள், இப்போதுதான் வெளிச்சப்படுகிறது. மக்களுக்கு புரியத்தொடங்கி விட்டது.

உண்மையான ஊழலற்ற தமிழகத்திற்கான விடியல் ஆட்சி, எப்போது வரும் என ஏக்கத்துடன் விருந்துகளையும், துலாபாரத்தையும், மக்கள் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.