இன்று முதல் அதிகபட்ச சில்லறை விலையாக 50 ரூபாவுக்கு முட்டை ஒன்றை விற்பனை செய்ய வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று வர்த்தக அமைச்சரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தொழிற்சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திக்கச் சென்றுள்ளன.
முட்டைத் தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
இதேவேளை, கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்பவர்களைத் தேடி, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று பல பகுதிகளில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தது.
பலாங்கொடை மற்றும் கஹவத்தை நகரங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த 10 கடைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதுடன், பலாங்கொடை பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் கடையும் அதில் அடங்குகிறது.
கட்டுப்பாட்டு விலையில் முட்டைகளை வாங்க நுகர்வோர் எதிர்பார்ப்பதால், முட்டை விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
மேல்மாகாண முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியதுடன், தற்போது முட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

