வடமாகாணத்தில் காணி அபகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் விசனம்

113 0

வடமாகாணத்தில் மக்களினுடைய காணிகளை அரசும், படையினரும், கையகப்படுத்தியுள்ள போதும், மக்கள் இடம் பெயர்ந்து பல வருடங்களாக வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்ற போது, அரசாங்கம் மக்களின் காணிகளை மக்களிடம் மீள கையளிக்க இது வரை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாணத்தில் காணி அபகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் ‘வடமாகாண காணி அபகரிக்கப்பட்டோரின் குரல்’ எனும் தொனிப்பொருளில் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமது காணியை இழந்த மற்றும் அரசாங்கம் சுவீகரித்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள்,பொது அமைப்புகள், கிராம மட்ட தலைவர்கள் என சுமார் 80 இற்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் வகையில் சட்டத்தரணிகளான செல்வராசா டினேசன் மற்றும் திருமதி சிவலிங்கம் புராதனி ஆகியோர் கலந்து கொண்டதோடு,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் உப அலுவலக அதிகாரியும் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த விசேட கலந்துரையாடலின் போது வடக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களையும் உள்ளடக்கி வருகை தந்திருந்த பிரதிநிதிகள் தமது மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள காணி அபகரிப்பு தொடர்பாக தெளிவு படுத்தினர்.

குறிப்பாக அரசாங்கம், படையினர், வனவள, தொல்பொருள் திணைக்களம் போன்றவர்கள் மக்களின் காணிகளை அபகரிப்பு செய்துள்ளமை குறித்து தெளிவு படுத்தினர்.

1984 ஆம் ஆண்டு சிங்கள அரசால் திட்டமிட்டு தாங்கள் வெளியேற்றப்பட்டு, தமது கிராமங்கள் பாதுகாப்பு வலயமாக இந்த அரசாங்கம் உறுவாக்கி உள்ளதாக  முல்லைத்தீவை சேர்ந்த வயோதிப தாய் ஒருவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களை கொண்டு வந்து அங்கே குடியேற்றம் செய்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய நிலங்களில் இந்த குடியேற்றம் இடம் பெற்றுள்ளது. தமது விளை நிலங்கள் இது வரை விடுவிக்கப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

சிங்கள அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், ஒரே குடையின் கீழ் ஒரே நாட்டில்,ஒரு ஆட்சியின் கீழ்  ஒரு தாய் மக்கள் போல் வாழ்வதாக ராஜபக்ச அரசாங்கம் கூறி வந்த நிலையில், தமிழர்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழர்களாகிய எங்களை ஓரங்கட்டி வந்துள்ளனர்.

இந்த புறக்கணிப்பு எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனாலேயே சிங்கள மக்கள், சிங்கள அரசாங்கம் என்று கூறுகின்ற போது வெறுப்பை ஏற்படுத்துகிறது. எனவே இந்த நிலை மாற வேண்டும். சிங்கள அரசாங்கம் தமிழர்களையும் மனிதராக ஏற்றுக்கொள்ள வேண்டும். என அவர்கள் தெரிவித்தனர்.