பாகிஸ்தானில் அனுமதி இல்லாமல் பேரணி- இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு

204 0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், ஷபாஷ் செரீப் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கடந்த 20-ந்தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற இம்ரான்கான் அந்தநாட்டின் தலைமை போலீஸ் அதிகாரி, தேர்தல் ஆணையம் மற்றும் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதற்கிடையில் இம்ரான் கான் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு இஸ்லாமாபாத் கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி அவருக்கு முன்ஜாமீன் கொடுத்ததுடன் அவரை நாளை ( 25-ந்தேதி) வரை கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இம்ரான் கான் மீது பாகிஸ்தான் அப்பாரா போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் அவர் கட்சி சார்பில் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாகவும்.அதில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப் பட்டதாகவும் இம்ரான்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையில் இம்ரான் கான் அடுத்தவாரம் 31-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி இஸ்லாமபாத் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. அப்போது அவர் போலீஸ் அதிகாரிமற்றும் பெண் நீதிபதி குறித்து விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.