நாட்டுக்காக முக்கிய பல தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்போம். எமது புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அநுராதபுரத்தில் மத வழிபாட்டில் ஈடுப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும, பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக கொடஹேவா,சரித ஹேரத்,டிலான் பெரேரா,உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் 09 உறுப்பினர் உள்ளடங்களாக 14 உறுப்பினர்கள் சனிக்கிழமை (20) அநுராதபுரத்தில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.
எரிபொருள் பற்றாக்குறையினை கருத்திற்கொண்டு இவர்கள் தனித்தனி வாகனங்களை பயன்படுத்தாமல் கொழும்பில் இருந்து அநுராதபுரம் வரை தனிப்பட்ட பேருந்தில் ஒன்றாக சென்றுள்ளனர்.
மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 14 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.அரசாங்கத்தின் தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கை மற்றும் கட்சி யாப்பிற்கு முரணாக உள்ளதால் ஒன்றிணைந்து செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது.
நாட்டுக்காக முக்கிய பல தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் முன்னெடுப்போம்.எமது புதிய அரசியல் பயணத்தை புனித நகரில் இருந்து ஆரம்பித்துள்ளோம்.
அரசியல் ரீதியான முக்கிய தீர்மானங்களை எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்போம்.அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதால் நாங்கள் இலக்கு வைக்கப்படுவதை விளங்கிக்கொள்ள முடிகிறது என்றார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவின் போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்ததை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் ஜனாதிபதி தெரிவில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.
இவ்வாறான நிலையில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுத்து,அவரை தவிசாளர் பதவியில் இருந்து நீக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கட்சியின் உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சியின் முக்கிய பதவிகள் மறுசீரமைக்கப்பட்டு அத்தீர்மானம் எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் வருடாந்த மாநாட்டின் போது உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான பின்னணியில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் உட்பட பொதுஜன பெரமுனவின் 14 உறுப்பினர்கள் தனித்து செயற்படுகிறார்கள்.

