நாட்டில் அமைதி வழியில் போராடுவதற்கான உரிமை சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமைதி வழி போராட்டங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பது நாட்டுக்கு ஆபத்தாகும். அது மக்களை மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பல்கலைக்கழகங்கள் மீள திறக்குமாறும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும், பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறும், அடக்குமுறை நிறுத்துமாறும் பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் மேற்கொண்டார்கள்.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால், அதன் பின்னர் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்வதேச உதவி தேவைப்படும் நேரத்தில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவது நமது நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.
ஐ.நா.வில் ஏற்கனவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஐ.நா மனித கூட்டத்தொடரில் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக சமீபத்திய தாக்குதல்கள், தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டமை உள்ளிட்டவற்றை புதிதாக உள்ளடக்கக் கூடும்.
இதுபோன்ற சம்பவங்கள் மூலம் சர்வதேச சட்டத்தை மீறி நாட்டு மக்களை மேலும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கும் நிலைக்கே ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள் என்றார்.

