வடக்கில் பேதைப்பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

232 0

யாழ். குடாநாட்டில் சமீபத்தில் போதைவஸ்து பாவனை மிக முக்கியப் பிரச்சினையாக காணப்படுகிறது. கலை, பண்பாடு, பாரம்பரியத்திற்கு பெயர்போன யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்ந்து கொண்டு இருப்பது மிகக் கவலையான விடயமாகவுள்ளது எனவே மக்கள் பிரதிநிதிகள் சமூகத்தலைவர்கள் இதனைத் தடுப்பதற்கு ஒன்று கூடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என  அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

யாழ்.நல்லை ஆதீனத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் பிரதிநிதிகளோ. கல்விமான்களோ, சமூகப் பொறுப்புணர்வு  உடையவர்களோசரியான முறையில் அக்கறை எடுக்காத காரணத்தினால் வடக்கில் இது அதிகரித்து செல்கின்றது.

வடக்கைப் பொறுத்தவரை போரினால் பல்வேறு இழப்புக்களை சந்தித்து வாழ்ந்து வரும் நிலையில் தற்போது போருக்கு பிற்பாடு பல இளைய தலைமுறைகளை இலக்கு வைத்து போதை வஸ்தின் பயன்பாடு அதிகரித்துச் செல்கின்றது. இதில் இளைய தலைமுறைகள் அநியாயமாக போதைவஸ்துக்கு ஆளாகி மரணத்தைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்த போதைவஸ்து பாவனையானது இன்று கட்டுக்கு அடங்காமல் இளைய தலைமுறையினரிடத்தே அதிகரித்து செல்கின்றது.

யாழிலுள்ள பிரபல்ய பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றை இலக்காக் கொண்டுள்ளதுடன் மேலும் ஒருசிலவாணிப இடங்கள் போதை வஸ்து இடங்கள் என அடையாளப்படுத்துகின்ற இடங்களாகவும் காணப்படுகின்றது.

இலங்கையில் போதைவஸ்து பாவனையினை முழுமையாக தடுத்து நிறு த்துவதற்கு வழிகளை கையாளாவிட்டால் மிகப் பெரிய ஆபத்தை இந்த நாடு சந்திக்கும்.

சமூகத்தின் முக்கியஸ்தர்கள் ,பொலிஸ் பொறுப்பதிகாரி கள், பிரதேச செயலர்கள், மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள்  பிரதேச சபைகள் இந்த விடயங்கள் தொடர்பாக ஒன்றுகூடி இதுவரை ஒரு ஆக்கபூர் வமான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் எங்கள் சமுதாயம் மிக கேவலமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. போதை கட்டுப்பாட்டு தினத்தில் மட்டும் விழாக்களை செய்வதில் அர்த்தம் இல்லை.

வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் மலையகத்திலும் இந்த பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதில் கூடுதலாக தமிழ் இளைஞர்களே பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு அவசரமான தீர்மானத்தினை ஒற்றுமையாக ஒன்றுகூடி இதனை தடுப்பதற்கு என்ன வழி என இதுவரைக்கும் சரியாக ஆராய்ந்ததில்லை .

வடக்கிலே மிக முக்கிய மான ஒரு கூட்டத்தினை நடத்தி தமிழர்களுடைய பகுதியிலே அதிகமான அளவில் போதைவஸ்து பாவனை நிலவுவதற்கான காரணங்கள் என்ன என கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான சரியான வழியினை பின்பற்ற அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்  என்றார்.