பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு மட்டக்களப்பு மக்களுக்கு எச்சரிக்கை

272 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எனவே பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்து கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், “டெங்கு நோயின் தாக்கம் காரணமாக இறப்புகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றன.

இலங்கையில் இந்த ஆண்டு மிகவும் அதிகளவில் டெங்கு நோயின் தாக்கம் இருக்கின்றமை அனைவருக்கும் தெரிந்த விடயமாக இருக்கின்றது.

தொடர்ச்சியாக சுகாதார அமைச்சும், சுகாதார திணைக்களமும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் பாரியளவு முன் திட்டத்துடன் சென்று கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு கோவிட் நிலைமையும் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக டெங்கு தடுப்பு செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை.

இந்த வருடத்தில் கடந்த 8 மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை (939) சடுதியாக குறைந்திருந்தாலும் கூட இறப்புகள் 5 ஆக அதிகரித்திருக்கிறது.

நமது சுகாதார பிரிவு மட்டத்தில் களத்தடுப்பு நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் எடுக்கப்பட்டாலும் எமக்கு உள்ளூராட்சி சபைகளின் உதவிகள் தேவைப்படுகின்றன.

இந்த காலகட்டங்களில் டெங்கு பரிசோதனை மேற்கொள்வதற்கு உரிய எரிபொருள் இல்லை என்கின்ற பிரச்சினை எழுகின்றது.

பொதுமக்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்களது வீடுகளையும் விட்டு சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கோவிட்-19 நான்காவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்தது என நாங்கள் நினைத்து கொண்டிருந்த போது இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட திரிபுபடுத்தப்பட்ட கோவிட் வைரஸின் தாக்கம் உணரப்படுகின்றது.

கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் இலங்கையில் 2500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 65 மரணங்கள் பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பிலும் இரண்டு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஆகவே கொழும்பில், கம்பஹாவில், களுத்துறையில் இந்த நோய் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மட்டக்களப்பிற்கு வருவதற்கு தாமதம் ஆகாது என்பது எங்களுக்கு தெரியும்.

எனவே மக்கள் அதிகமாக ஒன்று கூறுகின்ற இடங்களை தவித்துக்கொண்டு கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்கிற இடங்களுக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ளவும்.

அத்தோடு 4வது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும். மட்டக்களப்பில் அனைத்து சுகாதார பிரிவிலும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.