மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி

178 0

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில்  மருந்து தட்டுப்பாடு மிக விரைவில் தீர்க்கப்படும் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ஜாக்சன் அன்டணியின் நலம் விசாரிக்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்து இருந்தார்.

இதன்போது  தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.கே. விக்ரமசிங்கவை சந்தித்து வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்த போது இதனை அவர் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் பாரியளவில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவசர சத்திர சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்நிலையில் வைத்தியசாலைகளுக்கு  மருந்துகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதே எனது முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கிறது. அதற்காக ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக மருந்து தட்டுப்பாடு மிக விரைவில் தீர்க்கப்பட்டு மக்களுக்கு இலவச சுகாதார சேவையை அனுபவிக்க வாய்ப்பு பெற்று கொடுக்கப்படும் என்றார்.