ஆசிய – பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் இன்று யாழ் விஜயம்

179 0

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு அலுவலகத்தின் ஆசிய – பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் டேவிட் மெக்லக்லன்-கார் இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்குச் செல்லவிருப்பதுடன், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு அலுவலகத்தின் ஆசிய – பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் டேவிட் மெக்லக்லன்-கார் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்ததுடன் அவர் பெரும்பாலும் நாளைய தினம் வரையில் நாட்டில் தங்கியிருப்பார்.

அதன்படி ஏற்கனவே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்திருந்த அவர், இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு உரியவாறான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதுடன் மனிதாபிமான நெருக்கடியொன்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு அவசியமான பல்தரப்பு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் குறித்துக் கலந்துரையிருந்தார்.

அதுமாத்திரமன்றி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின்போது பொருளாதார, அமைதி மற்றும் அபிவிருத்தி ஆகிய விடயங்களில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் தனது கரிசனையை வெளிப்படுத்தியதுடன் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீட்சியடைந்து, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

மேலும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்கள், நிதியங்கள் மற்றும் ஒத்துழைப்புச்செயற்திட்டங்களின் நடவடிக்கைகள் எதிர்வரும் 2023 – 2027 ஆம் ஆண்டு வரையான 5 வருடகாலத்திற்கு எவ்வாறானதாக அமையும் என்பதை வழிநடத்தும் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி ஒத்துழைப்பு செயற்திட்டத்தில் கைச்சாத்திடும் நிகழ்விலும் டேவிட் மெக்லக்லன்-கார் பங்கேற்றிருந்தார்.

அதேவேளை 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை நாட்டிலுள்ள முக்கிய மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த அவர், நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர், அங்கு வடமாகாண ஆளுநர், வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.