கோட்டாபய நாடு திரும்பினால் பாதுகாப்பு வசதி செய்துகொடுக்கப்படும் – தினேஷ் குணவர்த்தன

149 0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டின் பிரஜையாவார். அவர் இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை. எனவே அவர் இலங்கை வருவதற்கான சாத்தியம் இருக்கின்றது. அவருக்கு வருவதற்கு உரிமையும் இருக்கின்றது  என்று பிரதமர் தினேஷ்  குணவர்த்தன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு என்று இலங்கையில் ஒரு நடைமுறை உரிமைகள் வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்படுகின்றன.  அதற்காக ஒரு சட்டமும் இருக்கின்றது.  பாதுகாப்பு மற்றும் ஏனைய வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.  ஏனைய  முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவை வழங்கப்பட்டுள்ளன.  எனவே கோட்டாபய வந்தால் அவருக்கு வசதிகள் செய்துகொடுக்கப்படும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி   கோட்டாபய  சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு  சென்றுள்ள நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயத்தை    கூறியிருக்கிறார். கடந்த ஜூலைமாதம்  9ஆம் திகதி  ஜனாதிபதிக்கு  எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து  கோட்டபாய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ததுடன்  சிங்கப்பூர் சென்று தங்கியிருந்தார். அங்கிருந்தவாறு தற்போது தாய்லாந்து சென்றிருக்கின்றார்.

அதன்படி கோட்டாபய ராஜபக்ஷ  நாடு திரும்புவாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில்  பிரதமர் தினேஷ் குணவர்த்தன  அவர் நாடு திரும்பினால் உரிய வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.  மேலும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றகரமாக  இடம்பெறுவதாகவும் பிரதமர் கூறினார்.  சகல கட்சிகளும் இணைந்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும்முயற்சிகள் முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன.  அடுத்தவாரம்   இந்தப் பேச்சுவார்த்தைகள்  நிறைவு பெறும் என்று  பிரதமர் தெரிவித்தார்.

எனினும்  மக்கள் விடுதலை முன்னணி  சர்வகட்சி   அரசாங்கத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றது. அதுமட்டுமன்றி  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்  சக்தியும்  அமைச்சரவையில் பங்கேற்கமாட்டோம்  என்றும்   எனினும்  பாராளுமன்ற   மேற்பார்வை  குழுக்களில் பங்கேற்போம் என்று அறிவித்திருக்கிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  பிரதமர் தினேஷ்,  மக்கள் விடுதலை முன்னணி தனது தீர்மானத்தை அறிவித்திருக்கிறது. ஆனால் கூட்டமைப்பு . உள்ளிட்ட சகல கட்சிகளும்   சர்வகட்சி   அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறவேண்டும் என்பதே எமது விருப்பம் என்று  குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க அரசியல் கைதிகள் குறித்து பேசிய  தினேஷ் குணவர்த்தன   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது  தொடர்பில் ஆர்வத்துடன் இருக்கின்றார் என்று கூறினார். சுமார்  100 பேர் அளவிலான அரசியல் கைதிகள்  இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர்.   இந்நிலையில் இது தொடர்பான  ஏற்பாடுகளை   ஜனாதிபதி  உரிய தரப்பினருக்கு  மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்றும் பிரதமர் தினேஷ் குறிப்பிட்டார்.

பிரதமர்   தினேஷ் குணவர்த்தனவுடனான  குறுகிய நேர செவ்வியின்  விபரம் இங்கு தரப்படுகிறது.

கேள்வி -சர்வகட்சி அரசாங்கத்தை  அமைக்கும் செயற்பாடுகள் எவ்வாறு  காணப்படுகின்றன?

பதில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல அரசியல் கட்சிகளையும் கொண்டு ஒரு சர்வகட்சி  அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார். ஜனாதிபதி இந்த நடவடிக்கையை இதய சுத்தியுடன் முன்னெடுக்கின்றார்.   அதற்காக சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.  கடந்த சில தினங்களாக நானும் ஜனாதிபதியும் தொடர் பேச்சு வார்த்தைகளை அரசியல் கட்சிகளுடன் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.  இவ்வாறு சர்வ கட்சிகளும் இணைந்து இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.  தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  விரைவாக இந்த பேச்சு வார்த்தைகளை நாங்கள் முடிவுறுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.  பெரும்பாலும் அடுத்த வாரமளவில் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுறுத்தப்படும்.

கேள்வி- பேச்சு வார்த்தைகள் எந்த மட்டத்தில் காணப்படுகின்றன ?

பதில் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் சிறந்த மட்டத்தில் காணப்படுகின்றன.  முக்கியமாக தற்போது அரசியல் கட்சிகள் சர்வ கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்பதா அல்லது அது தொடர்பாக நியமிக்கப்படுகின்ற குழுக்களில் பங்கேற்பதா என்பது தொடர்பான ஆராய்ந்துகொண்டிருக்கின்றன.  அது தொடர்பாகவே தற்போது சகல தரப்பினரும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.  தற்போதைய  பேச்சு வார்த்தைகளில் இந்த விடயங்கள் குறித்தே கவனம் செலுத்தப்படுகிறது. காரணம் சர்வகட்சி அரசாங்கம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தை சகலரும் ஏற்கின்றனர்.

கேள்வி- அப்படியானால் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான ச்சுவார்த்தைகள்   அடுத்த வாரம் நிறைவடையும் சாத்தியம் இருக்கிறதா ?

பதில் சர்வகட்சி அரசாங்கம் குறித்த  பேச்சு வார்த்தைகளை அடுத்த வாரத்துக்குள் முடிவுறுத்துவதற்கே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  நாம் அவ்வாறு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.

கேள்வி- தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சகல அரசியல் கட்சிகளுடனான பேச்சுக்களின்போது என்ன விடயங்கள் ஆராயப்பட்டன? 

பதில் இந்த தரப்பினருடனான பேச்சுக்களின்போது பல விடயங்கள் பல கோணங்கள் குறித்து ஆராயப்பட்டது. சகல கட்சிகளும் சர்வகட்சி அரசில் அதன் அமைச்சரவையில்   பங்கேற்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும்.     இதுதான் எங்களது நோக்கமாக இருக்கிறது.  அதன் காரணமாகவே ஜனாதிபதி சகலருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.  அதன் காரணமாகவே சகல தரப்புக்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.  அதன் அடிப்படையிலேயே முதல் சுற்று பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்து இருக்கின்றன.  அடுத்த வாரம் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்படும்.

கேள்வி- தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடனான  பேச்சுவார்த்தைகளில் பிரதமர் என்ற ரீதியில் நீங்கள் கலந்து கொண்டிருந்தீர்கள்.  அவர்களின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது?

பதில் அதாவது ஒரு சர்வ கட்சி அரசாங்க வேலை திட்டம் ஒன்றுக்கு சென்று இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.  அதனை பேச்சுவார்த்தைகளில் உணர முடிகிறது. அதற்காக ஒரு இணக்கப்பாட்டை எட்டுவதற்கான தேவையே இருக்கின்றது.  ஆனால் இன்னும் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.  பல இணக்கப்பாடுகள் புரிந்துணர்வுகள் எட்டப்பட வேண்டி உள்ளன.  ஒரு பொதுவான வேலை திட்டம் அவசியம் என்பதை சகலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

கேள்வி – பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்தில் இடம் பெற வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே கருதுகிறீர்களா?

பதில் நிச்சயமாக சகல அரசியல் கட்சிகளும் இந்த சர்வகட்சி அரசாங்கத்தில் இடம் பெற வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகிறோம்.  மக்களின் கோரிக்கையாகவும் அதுவே இருக்கின்றது.  கடந்த காலங்களில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களிலும் இந்த கோரிக்கையை காணப்பட்டதே? அதன் காரணமாகவே நாங்கள் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்துகின்றோம்

கேள்வி- ஆனாலும் மக்கள் விடுதலை முன்னணி அதனை நிராகரித்துள்ளதே?

பதில்      இந்த சர்வ கட்சி அரசாங்கம் குறித்து கட்சிகளுடன் நடத்தப்படுகின்ற பேச்சு வார்த்தைகளில் பாரிய  முன்னேற்றம் காணப்படுகிறது.  எம்முடன் இதுவரை மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர்கள் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார்கள்.  நாங்கள் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய மாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணி  மட்டுமே தெரிவித்திருக்கிறது.  ஆனால் சகலரும் இணைந்த சர்வகட்சி அரசாங்கத்தையே விரும்புகிறோம்.

கேள்வி-  அப்படியானால் ஏனைய கட்சிகள் அனைத்தும் இணக்கப்பாட்டுக்கு வந்துவிட்டனவா?

பதில் ஏனைய கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முயற்சித்து கொண்டிருக்கின்றன.  அதாவது இவ்வாறான ஒரு செயல்பாடு தேவை என்பதை   கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றன.  ஆனால் அதனை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாகவே தற்போது பேசப்படுகிறது.

கேள்வி-  உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தற்போது பேசப்படுகிறது. அப்படியானால் அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நாங்கள் எதிர்பார்க்க முடியுமா?

பதில் அடுத்த வருடம் ஆரம்பத்தில் தேர்தலை எதிர் பார்க்கக்கூடிய சூழலும் இருக்கின்றது என்றே கூற வேண்டும். அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை   உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீண்டு வர வேண்டும். தேர்தலை நடத்தக்கூடிய ஒரு சூழல் உருவாக வேண்டும்.  எரிவாயு எரிபொருள் உரம் உள்ளிட்ட நெருக்கடிகள் தீர்க்கப்படுவது அவசியம். இந்த விடயங்களில் ஏற்கனவே நாங்கள் முன்னேற்றத்தை  கொண்டுவந்திருக்கின்றோம்.  பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் பலப்படுத்தியவுடன் தேர்தலுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான  சூழலில் தேர்தல் நடத்தப்படும்.

கேள்வி-  தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியை   நம்ப வேண்டும் என்று நீங்கள் இதற்கு முன்னர் கூறியிருந்தீர்கள்.ஏன் ?

பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜனாதிபதியுடன்  பேச்சு வார்த்தைகளில் பங்கெடுத்து வருகிறது.  பாராளுமன்ற பேச்சுக்களிலும் அந்த கட்சி கலந்து கொள்கிறது. அதனால் ஒரு இணக்கப்பாட்டுடன் புரிந்துணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது கோரிக்கையாக உள்ளது.

கேள்வி- அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பும் சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதா  உங்கள் விருப்பம்?

பதில் தமிழ்க் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல எதிர்க்கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது எமது நோக்கமாக இருக்கின்றது. இது  தொடர்பாக பகிரங்க அழைப்பை நாங்கள் விடுத்திருக்கின்றோம்.  அந்த வகையில் சிலர் அமைச்சரவையில் பங்கெடுப்பதாக கூறுகின்றனர்.  சிலர் பாராளுமன்ற குழுக்களில் பங்கெடுப்பதாக கூறுகின்றனர்.    தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளும் அமைச்சரவையில் பங்கெடுப்பது சிறந்ததாக அமையும்.

கேள்வி- ரோயல் கல்லூரியின் வகுப்பு தோழர்கள் இருவர் ஒருவர் ஜனாதிபதியாகவும் ஒருவர் பிரதமராகவும் இருக்கின்றனர்.  இந்த அனுபவம் எவ்வாறு இருக்கின்றது ?

பதில் விசேட தன்மை என்று ஒன்றுமில்லை அந்த காலத்தில் இருந்து நாங்கள் இருவரும்   ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள். அரசியலில் வேறு  முகாம்களில் இருந்தாலும் கூட எங்களுக்கு இடையில் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு தெரியும்.   ஆனால் இது ஒரு விசேடமான அரசாங்கமாக இருக்கின்றது.  தற்போதைய சூழலில் கட்சிகளின் கொள்கைகளை விட தேசிய நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதே முக்கியமாக உள்ளது.  அவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அரசாங்கமே தற்போது இருக்கின்றது.

கேள்வி – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  அவர் மீண்டும் இலங்கை வருவாரா?

பதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டின் பிரஜை. அவர் இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை. எனவே அவர் இலங்கை வருவதற்கான சாத்தியம் இருக்கின்றது. அவருக்கு வருவதற்கு உரிமையும் இருக்கின்றது.

கேள்வி -அவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வந்தால் அவருக்குரிய பாதுகாப்பு மற்றும் ஏனைய  வசதிகள் செய்து கொடுக்கப்படுமா ?

பதில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு என்று இலங்கையில் ஒரு நடைமுறை உரிமைகள் வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்படுகின்றன.  அதற்காக ஒரு சட்டமும் இருக்கின்றது.  பாதுகாப்பு மற்றும் ஏனைய வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.  ஏனைய  முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவை வழங்கப்பட்டுள்ளன.  எனவே கோட்டாபய வந்தால் அவருக்கு வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

கேள்வி-  முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தீர்களா? தற்போதைய நிலை குறித்து அவர் என்ன கூறுகிறார் ?

பதில் அவர் அடிக்கடி எங்களை சந்திப்பார்.  பாராளுமன்றத்திலும் எங்களை சந்திக்கிறார்.

கேள்வி-  எமக்கு என்ன நடந்தது என்று நீங்கள் அவரிடம் எப்போதாவது கேட்டீர்களா?

பதில் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த நேரத்திலும் தமது ஒத்துழைப்பும் ஆசிர்வாதமும் இருக்கின்றது என்று என்னிடம் அடிக்கடி அவர் கூறுகிறார்.  ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைப்பு வழங்குவதற்கு அவர் தயாராக இருக்கிறார்.

கேள்வி-  நீங்கள் ஏன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்துக்கு சென்றீர்கள்?

பதில் நான் பல அரசியல் கட்சிகளுடன் நட்புறவு பாராட்டுகின்றேன்.  அந்த அனைத்துக் கட்சிகளின் அலுவலங்களுக்கும் சென்று வர நான் எதிர்பார்க்கின்றேன்.  பிரதமர் என்ற ரீதியில் இந்த நட்பு பலப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். எனவே அந்த சகல கட்சிகளினதும் தலைமை  அலுவலகங்களுக்கு செல்ல நான் எதிர்பார்க்கிறேன்.

கேள்வி-  ஜெனிமா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் நடைபெறுகிறது.  இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட பச்லட் எதிர்பார்க்கிறார்  அதனை இலங்கை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

பதில் அந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  அங்கு சமர்ப்பிக்கப்படுவதற்காக ஏற்கனவே ஒரு அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி -தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆர்வத்துடன் இருக்கின்றாரா?

பதில் ஜனாதிபதி தமிழ் அரசியல்  கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருக்கின்றார்.  இது தொடர்பான நடவடிக்கைகளை அவர் எடுத்துக் கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன்.  நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றவர்களை விரைவாக விடுவிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை  எடுப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருக்கிறார்.  அந்த பேச்சு வார்த்தைகளில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.

கேள்வி- காணாமல் போனோரின் உறவுகள் தமக்கு நீதிகோரி  ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின்  போராட்டம் ஆரம்பமாகி 2000 நாட்கள் கடந்து விட்டிருக்கின்றன.  இது தொடர்பாக ?

பதில் இந்த பிரச்சினை  முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.  முக்கியமாக காணாமல் போனோர்   அலுவலகத்தை பலப்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.  அதற்கு தேவையான வளங்களை நாங்கள் பெற்றுக் கொடுக்கிறோம்.  தகவல்களைப் பெற்றுக் கொள்வது மட்டுமின்றி அவற்றை உறுதிப்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கேள்வி-  வடக்கு கிழக்கு யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு எப்போது விஜயம் செய்ய எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்  நாட்டின் சகல பகுதிகளுக்கும் விஜயம் செய்யது எதிர்பார்க்கின்றேன்.  விசேடமாக வடக்கு கிழக்கின் பல பகுதிகளுக்கும் விரைவில் செல்வேன்.

கேள்வி – தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உங்கள்  சிரேஷ்ட நண்பர் சம்பந்ததை  எப்போது சந்திக்க போகிறீர்கள்?

பதில் நான் சம்பந்தனை  விசேடமாக  சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த எதிர்பார்க்கிறேன்.  அவர் பாராளுமன்றம் வரும்  சந்தர்ப்பங்கள் தற்போது குறைவடைந்திருக்கின்றன.

கேள்வி- பிரதமர் என்ற வகையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?

பதில் சகல மக்களும்  இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.  நாம் சகல மக்களுக்கும் பொதுவான வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்பதை அறிவிக்கின்றோம்.  அதனை ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் கூட வலியுறுத்தி இருந்தார்.

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி