சென்னை கூவத்தூரில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன் சசிகலா காணொளி காட்சி மூலம் பேசியதாக தகவல்

249 0

ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று சந்தித்த சசிகலா அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதேபோல் முதலமைச்சர் பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்து பேசினார். இதனையடுத்து, ஆளுநர் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் கூறவில்லை.

இதனிடையே எம்.எல்.ஏ-க்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று சசிகலா தரப்பு அதிமுகவினரும், மிரட்டி கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுகவினரும் கூறி வருகின்றனர்.

இதனையடுத்து, சென்னைக்கு அருகில் உள்ள கூவத்தூர் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதேபோல், தங்களை யாரும் அடைத்து வைக்கவில்லை என்றும் சுதந்திரமாகவே கூவாத்தூரில் தங்கி உள்ளதாகவும் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பேட்டி கொடுத்தனர்.

இந்நிலையில், சென்னை கூவத்தூரில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன், சசிகலா காணொளி காட்சி மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இதனிடையே, அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் ஆகியோர் சென்றனர்.