மீண்டும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு

186 0

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது எனவும்  அதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இது தொடர்பாக கருத்து கூறுகையில்,

குறிப்பாக அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு உக்கிரமடைந்துள்ளது. சிகிச்சைகளுக்கான  தேவையான மருந்துகள் வைத்தியசாலைகள் அல்லது மத்திய மருந்து களஞ்சியசாலை நிலையங்களில்  இல்லை.

தற்பொழுது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் மருந்துகள் தொடர்பான கட்டமைப்பை தொடர்ச்சியாக நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்து செல்வதற்கு பிரதான வைத்திய சாலைகளில் மருந்துகள் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும்.  குறிப்பாக இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் காணப்படவில்லை என்றால் பாரியதொரு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.

மருந்துகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச நாடுகளுடைய ஒத்துழைப்புகள்  கிடைக்கபெற்றது. இருப்பினும்  குறித்த மருந்து பொருட்கள் முறையாக முகாமைத்துவம் செய்யப்பட்டதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.

தேவையான பகுதிகளுக்கு அவை முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டதா? என்பது தொடர்பில் தற்போது கேள்வி எழுகிறது. தற்போது வைத்தியசாலைகளில் ஏற்பட்டு இருக்கும் மருந்து தட்டுப்பாடு களுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு குறிப்பாக ஒரு நோயாளிக்கு 5 மாத்திரை வகைகள் வீதம் வழஙக்கப்படுமாயின் தற்போது அண்ணளவாக இரண்டு அல்லது மூன்று மாத்திரை வகைகள் வீதம் மாத்திரமே வழங்கப்படுகிறது.

ஏனைய மருந்துகளை தனியார் மருந்தங்களில்   கொள்வனவு செய்து கொள்ளுமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டாலும் அதனைக் கொள்வனவு செய்வதற்கு கூட முடியாத நிலைக்கு மக்கள் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

விலைகள் அதிகரிப்பு காரணமாக 3 வாரங்களுக்கு தேவையான மருந்துகளை பாவிக்க வேண்டிய நோயாளி இரண்டு நாட்களுக்கு தேவையான மருந்துகளை மாத்திரமே பெற்றுக்கொண்டு வீடு திரும்புகிறார்.

சந்தையில் பருப்பு விலை அதிகரித்தால் அதை சாப்பிடாமல் பிரிதொரு உணரை உண்ணலாம்.ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்த வேண்டிய ஒருவர்  கட்டாயம் அனைத்து மருந்துகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக அண்மையில் அநுராதபுரம், பதுளை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இது தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை உடன் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.