குலையப்போகும் கூட்டமைப்பு

168 0

22 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு இரண்டு தசாப்பதங்களுக்குள் 50 சதவீதமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அத்துடன் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுரேஷ்பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஆகிய இரு கட்சிகள் வெளியேறியும் உள்ளன.

கூட்டமைப்பின் பிரதான கட்சியாக இருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி தேர்தல் அரசியலுக்குள் வலிந்து இழுத்துவந்த விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் ஆகியோர் வெளியேறி தனிக்கட்சியை உருவாக்கியும் உள்ளார்கள்.

இந்த நிகழ்வுகளுக்கு “கூட்டமைப்பு ஒரு ஜனநாயக கட்டமைப்பு. கொள்கை ரீதியாக பயணிக்க கூடியவர்கள் உள்ளே வரலாம். முடியாதவர்கள் வெளியே செல்லலாம்” என்று அதன் தலைமை ‘சாணக்கிய’ பதிலை அளிக்கிறது. ஆனால், கூட்டமைப்பின் பிரதிநித்துவச் சுருக்கத்தால்,  பிரச்சினை தலைமைக்கு அல்ல. ஒட்டுமொத்த தமிழினத்துக்குமானதே.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் சக்தியாக திகழ வேண்டும் என்பதற்காக அதனையொரு வலுவான அரசியல் கட்டமைப்பாக்குவதற்கு பல்வேறு பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டன.  மன்னார் மறைமாவட்ட மறைந்த ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை முதல் சமயத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர், புத்திஜீவிகள், புலம்பெயர் அமைப்பினர் என்று பலதரப்பினரும் முயற்சித்தனர். இருப்பினும் அவையனைத்தும் தோற்றுப்போயுள்ளன.

இந்நிலையில் சமகாலத்தில் கூட்டமைப்பினுள் நிலைமைகள் மோசமடைய ஆரம்பித்திருக்கின்றன. கூட்டமைப்பிற்குள் குத்துவெட்டுக்கள் ஒன்றும் புதிய விடயம் அல்ல. அது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே நீடித்து வருவது தான்.  ஆனால், தற்போது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அணியமைத்து சமூக ஊடகங்களில் சக உறுப்பினர்களை மிகக்கேவலமாக சாடும் அளவிற்கு மூன்றாந்தர நிலையை அடைந்துள்ளது.

இந்தநிலை, தமிழ் மக்களுக்கு எரிச்சலை ஊட்டியுள்ளது. கூட்டமைப்பு உட்பட, தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து பயணிக்கச் செய்வதற்காக முயற்சிகளில் ஈடுபட்டவர்களும் சலிப்படைந்துவிட்டனர். சலிப்படைந்தவர்கள், ஒன்றிணைந்து ‘அமைப்பாக’ முயற்சிக்கின்றனர் அந்த அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நோக்கத்தையும் கொண்டிருக்கின்றனர் என்பது வேறுவிடயம்.

இவ்வாறிருக்க, கூட்டமைப்பின் சமகால குத்துவெட்டுக்களுக்கு பலகாரணங்கள் இருந்தாலும், பிரதான காரணம் தலைமைத்துவப் போட்டி தான். சம்பந்தனைப் பொறுத்தவரையில் அடுத்த ஆறுமாதங்களில் தொண்ணூறை அடையப்போகின்றார்.  அவருடைய இயங்கு நிலைக்கு முதுமை பிரதான காரணமாகின்றது.

கூட்டமைப்பினுள் சம்பந்தனுக்கு அடுத்த சிரேஷ்டத்துவத்தில் இருப்பவர் சேனாதிராஜா. அவர், தேர்தல் தோல்வியைக் கண்டுவிட்டார். இலங்கை தமிழரசுக்கட்சி நிருவாகத்திலும் வினைத்திறனை வெளிப்படுத்தவில்லை.

இதனால், அவர் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்தில் நீடிப்பதில் கூட கேள்வியெழுந்துள்ளது. அவ்வாறான நிலையில் கூட்டமைப்பின் தலைமை அவருக்கு (அவர் விரும்பினால் கூட) எட்டாக்கனியாகவே இருக்கும்.

சேனாதிராஜாவும், கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்புக்கு வெளியிலான  ஆறுகட்சிகளின் கூட்டு என்று இரட்டைத்தோணியில் பயணித்துக்கொண்டிருக்கின்றார். ஆறுகட்சிகளின் கூட்டு செயற்பாட்டு ரீதியாக வெற்றி பெற்றாலும், ‘ஒற்றைத்தலைமை’ உருவாகப்போவதில்லை. அக்கூட்டில், ‘தலைமைத்துவ சபைக்கான’ முன்மொழிவே காணப்படுகின்றது என்பதை சுட்டிக்கூற வேண்டியுள்ளது.

இந்நிலையில் கூட்டமைப்பின் அடுத்த தலைமைத்துவத்துக்;கான போட்டிக்களத்தில் நால்வரின் பெயர்கள் மேலெழுந்துள்ளன. அதில் முதலாமானவர், சுமந்திரன். தற்போதைய நிலையில், பாராளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் முதல் ஏனைய சந்திப்புக்கள் வரையில் சம்பந்தனை பிரதிநித்துவம் செய்கிறார். அவர், கூட்டமைப்பின் தலைவர் என்ற பதவியின் அங்கீகாரத்தினை அனுபவத்தில் கண்டுவிட்டார். ஆகவே, அவர் அந்தப்பதவியில் நீடிப்பதை அதிகம் விரும்புவதில் ஆச்சரியமில்லை.

அதேநேரம், சம்பந்தனை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் விடயங்களைக் கையாண்ட அனுபவம் கொண்டவராக இருப்பதால் அவரே அடுத்த தலைவராக நீடிப்பது பொருத்தமானது என்ற எண்ணப்பாடு உடையவர்கள், தமிழரசுக்கட்சிக்குள்ளும் இருக்கின்றார்கள், புலம்பெயர்ந்த மண்ணிலும் உள்ளார்கள்.

அவ்விதமானவர்கள், தமிழரசுக்கட்சியில் தலைவர் அல்லது செயலாளர் பதவியை சுமந்திரன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுகின்றார்கள். சுமந்திரனிடமும் அவ்வாறான திட்டமொன்று உள்ளது. அதனால் தான் அவர் மத்திய குழு மற்றும், பொதுச்சபை ஆகியவற்றில் தனது ஆதரவுத்தளத்தினை கட்டமைத்து வருகின்றார்.

ஆனால். சுமந்திரனின், சாணக்கியனுடன் இணைந்ததான தனியோட்டமும் தமிரசுக் கட்சிக்குள்ளும், கூட்டமைப்பின் பங்காளிக்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்துவதாக உள்ள நிலையில் அவர் தவைமைத்துவத்தினை இலகுவாக அடைந்துவிட முடியாது. இதில் மதமும் செல்வாக்குச் செலுத்துகின்றது.

இரண்டாமனவர் சிறிதரன். இவர் சுமந்திரனுக்கு எதிராக காய்நகர்த்துகிறார். அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானாலும், கூட்டமைப்பின் தலைமைக்கான தெரிவில் போட்டியிட்டால் இவரால் இலக்கை அடையமுடியாது.

ஏனென்றால், சாள்ஸ் நிர்மலநாதனை தவிர கூட்டமைப்பின் தற்போதைய பங்காளிகளாக இருக்கும், ரெலோவோ, புளொட்டோ சுமந்திரன் அணியோ நிச்சயம் அவருக்கு ஆதரவை வழங்கப்போவதில்லை.

ஆகவே, தான் அவரும், தமிழரசுக்கட்சியின் தலைமையை நோக்கி நகருவதற்கான காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றார். கட்சியில் அதிகாரத்தைப்பெற்றால் ஏனைய உறுப்பினர்கள் தன்வசம் இருப்பார்கள் என்பது அவரது கணக்கு. இதனால், தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரன், சிறிதரன் தலைமையிலான பிரதான இரு அணிகள் உருவெடுத்து ஏட்டிக்குப்போட்டியாக செயற்படுகின்றன.

இந்தவிடயங்களை சோனாதிராஜா உணர்ந்ததாலோ என்னவோ தான், தமிழரசுக்கட்சியின் மாநாட்டிற்கு நாள் குறிக்காது காலத்தை நகர்ந்துகொண்டிருக்கின்றார். தற்போதே, கட்சியின் கட்டுப்பாடுகள் அவரது கையை மீறிவிட்ட நிலையில் இன்னும் எவ்வளவு காலத்திற்குச் செல்லமுடியும் என்பது அவருக்குத் தான் வெளிச்சம்.

கூட்டமைப்பின் தலைமைக்கான நகர்வினைச் செய்யும் மூன்றாமவர் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன். ரெலோவைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சி, மற்றும் ஸ்தாபகத்தலைவர் என்பதை பிரதான விடயங்களாக முன்வைக்கிறது. அத்துடன் கூட்டமைப்பினுள் செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தனுக்குப் பின்னர், சிரேஷ்டத்துவமானவர் என்ற தர்க்கமும் ரெலோவிடம் காணப்படுகின்றது.

அதேநேரம், பாராளுமன்றக்குழுவின் ஊடாக கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கான தெரிவுக்குச் சென்றால், அடைக்கலநாதனின் தலைமைத்துவ இலக்கு கனவாகவே இருந்துவிடும் என்பதையும் ரெலோ நன்குணர்ந்துள்ளது.

எனவே, தான் சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்பிற்கு ‘சுழற்சி முறையில் தலைமைத்துவம்’ என்ற முன்மொழிவை ரெலோ வெளிப்படுத்தியுள்ளது. அவ்வாறு சுழற்சி முறையிலான தலைமைத்துவ முன்மொழிவை ஏனைய தரப்புக்கள் ஏற்றுக்கொண்டால், சுழற்சிமுறைத்தலைமைத்துவத்தின் முதற்காலத்தினை ரெலோ இறுக்கமாகப் பற்றிப்பிடித்து அடைக்கலநாதனை தலைமைக்காக முன்மொழியும்.

அதன்மூலம் கூட்டமைப்பின் தலைமையை கையிலெடுக்கும் ரெலோ பதவியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் இணங்கியதற்கமைய மாற்றிக்கொடுக்குமா என்பதெல்லாம் அடுத்தகட்ட விடயங்கள். ஏனென்றால் கூட்டமைப்பின் பேச்சாளர் விடயத்தில் சம்பந்தன் தமக்கு உறுதிப்பாட்டை வழங்கியுள்ளபோதும் அது இன்னமும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை என்ற வலி ரெலோவுக்குள்ளது.

இதனைவிடவும், தலைமைத்துவப் போட்டியில் நான்காமனவர் சித்தார்த்தன். தமிழரசுக்கட்;சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த தர்மலிங்கத்தின் புதல்வர். புளொட்டின் கடந்தகாலத்தை மறந்து அவருக்கு கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை வழங்குவது பொருத்தமென தமிழரசுக்கட்சிக்காரர்கள் சிலர் கருதுகின்றார்கள்.

அத்துடன், சித்தார்த்தனின் நெகிழ்வுப்போக்கு தலைமைத்துவத்திற்கு பொருத்தமெனவும் அவர்கள் வலுச்சேர்க்கின்றார்கள். ஆனால், அவர் தனியொரு பிரதிநிதி. ஏற்கனவே, போட்டிக்களத்தில் உள்ளவர்கள் ஓரிருவரையாவது உறுதியான ஆதரவாளர்களாக கொண்டவர்கள். சித்தார்த்தனுக்கு ரெலோ உதவியளித்தால் கூட ஏனையவர்களை கடந்து வெற்றிபெற முடியும் என்பது முயற்கொம்பான காரியமாகும்.

கூட்டமைப்பின் அடுத்ததலைமைத்துவத்துக்கான நகர்வுகளின் யதார்த்தம் மேற்கண்டவாறு இருக்கின்றபோதும், கூட்டமைப்பின் அடுத்ததலைவர் யார் என்ற கேள்வியை உறுப்பினர்களிடத்தில் கேட்டால் “சம்பந்தன் இருக்கின்றார் தானே” என்று தான் பதிலளிக்கிறார்கள்.

அதேநேரம், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடத்தில் உங்களுக்குப் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் யார் என்று கேள்வியெழுப்பினால், “மக்கள் தமது தலைவரை தெரிவு செய்வார்கள்” என்று இலாவகமாக பந்தைப்பரிமாற்றம் செய்துவிடுகிறார்.

அதேநேரம், சம்பந்தன், அடுத்த தலைமையை அடையாளம் காண்பிப்பதற்கோ, அல்லது அடுத்த தலைமைக்கான பொறிமுறையொன்றை இணக்கப்பாடுகளுடன் ஏற்படுத்தாது விட்டச் செல்வராக இருந்தால் அவர் தான் கூட்டமைப்பின் இறுதித் தலைவராக இருக்கப்போகிறார்.அது அவரது வரலாற்றுத்தவறாகவே பதியப்படும்.

ஏனென்றால் சம்பந்தனுக்காகவே, ரெலோவும், புளொட்டும் அமைதியாக இருக்கின்றன. சிறிதரன் போன்ற தமிழரசுக்கட்சிக்காரர்களும் அடக்கி வாசிக்கின்றார்கள். சம்பந்தனின் காலத்தின் பின்னர் அவர்கள் அவ்வாறு இருப்பார்கள் என்று கூறுவதற்கில்லை. அப்படியானால் சம்பந்தனுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குலைந்துவிடும் என்பது தானே நிதர்சனம். சிலவேளைகளில், ஜனாதிபதி ரணிலின் ஆட்சிக்கால நிறைவுக்குள்ளும் அதற்கான முன்சமிக்ஞைகள் நிகழ்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆர்.ராம்