திமுக ஆட்சியில் சமூகநீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கை: தமிழக தீண்டாமை ஒழிப்புமுன்னணி நடத்திய கணக்கெடுப்பில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 24 மாவட்டங்களில், 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சித் தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற அனுமதிமறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சிஅளிக்கிறது.
22 ஊராட்சிகளில் பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு அமரஇருக்கை மறுக்கப்பட்டு தரையில்அமர்த்தப்படுகின்றனர். 42 ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர்களின் பெயர் பலகை வைக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இங்கு அமர்ந்து கொண்டு உத்தரபிரதேசத்தில் என்ன நடக்கிறது, பிஹாரில் என்ன நடக்கிறது என்றுவிவாதித்துக் கொண்டிருக்கும் சிலர், தமிழகத்தில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்கிறார்கள் என்ற மாயையில் இருக்கின்றனர். திமுக ஆட்சியில் சமூகநீதி என்பது பெயரளவில் மட்டுமேஉள்ளது என்பதை சமீபகால நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

