அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தி துன்புறுத்தல்களை கடுமையாக எதிர்க்கின்றோம்!

96 0

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் உலகநாடுகளை ஈர்க்கக்கூடியவகையில் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாகத் தெரிவித்திருக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய, இருப்பினும் அவசரகாலச்சட்டத்தை உபயோகித்து முன்னெடுக்கப்படும் துன்புறுத்தல் நடவடிக்கைகளைத் தாம் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் கரு ஜயசூரியவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைமையைக் கடுமையாகத் திரிபடையச்செய்து, சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்த அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு, 22 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழச்சியடைகின்றோம். அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கான முற்போக்கு நடவடிக்கையாகவே நாம் இதனைக் கருதுகின்றோம்.

மேலும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்குரிய பல அதிகாரங்களை முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலம்வரை நீடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தோல்வியடையச்செய்து, எதிர்வரும் 6 ஆம் திகதியிலிருந்து அவற்றை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவராலும் பாராட்டப்படத்தக்கவையாகும்.

இவ்வாறான ஜனநாயக சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு முன்வந்த ஜனாதிபதிக்கும் நீதியமைச்சருக்கும் அரசாங்கத்திற்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் நாம் நன்றி கூறுகின்றோம்.

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதத்தில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்குரிய தமது கடமையை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றோம். அதேபோன்று இந்த 22 ஆவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் விரும்புகின்றோம்.

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிசெய்வதும் மக்களின் நலனுக்காகப் பணியாற்றுவதும் எதிர்கால சந்ததியினர் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதும் மக்களின் பிரதிநிதிகளின் கடமையாகும். அந்தக் கடமையை உரியவாறு நிறைவேற்றுவதற்கு நாம் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

முந்தைய அரசாங்கம் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய நாளிலிருந்து நாம் அதனை நீக்குவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுவந்தோம். அதேபோன்று நாட்டின் நலனுக்காக மேற்கொள்ளப்படவேண்டிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை முன்னிறுத்தியும் நாம் போராடவேண்டியுள்ளது.

அதேபோன்று ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் உலகநாடுகளை ஈர்க்கக்கூடியவகையில் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோதிலும், அவசரகாலச்சட்டத்தை உபயோகித்து முன்னெடுக்கப்படும் சில நடவடிக்கைகளை நாம் எதிர்க்கின்றோம் என்பதையும் வலியுறுத்திக்கூறுகின்றோம்.

குறிப்பாக ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அறவழிப்போராட்டத்தின் செயற்பாட்டாளர்களையும் தொழிற்சங்கத்தலைவர்களையும் துன்புறுத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மாறாக அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைகின்றோம்.

இவ்வாறான சம்பவங்களால் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நாட்டிற்கு பல்வேறு பாதக விளைவுகள் ஏற்படக்கூடும். எனவே இவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி உரிய அவதானம் செலுத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.