மாணவர்களை தொழிலுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது

139 0

உலகலாவிய ரீதியில் சிறுவர் தொழிலாளர்கள் என்ற விடயம் முற்றாக நிராகரிக்கப்படுகின்ற நிலையில் , எமது அரசாங்கம் பாடசாலை மாணவர்களை தொழிலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

கொவிட் தொற்றினால் கல்வியை முற்றாக இழந்துள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலேயே இந்த செயற்பாடு காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை  (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பாடசாலை மாணவர்கள் தனியார் துறைகளில் 20 மணித்தியாலங்கள் தொழில் புரிவதற்கு இடமளிப்பதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருக்கின்றார். அதற்கமைய ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் தொழிலாளர்கள் என்ற விடயம் உலகலாவிய ரீதியில் நிராகரிக்கப்படும் ஒன்றாகும். உலகலாவிய ரீதியில் பாரிய போராட்டங்களின் பின்னரே சிறுவர் தொழிலாளர்கள் குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இன்று எமது நாட்டில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தொழில் புரியலாம் என்று அரசாங்கம் அறிவிக்கின்றமையின் ஊடாக அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொவிட் தொற்றின் காரணமாக மாணவர்கள் தங்கள் கல்வியை இழந்துள்ளனர். தற்போதும் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் முழுமையாக முன்னெடுக்கப்படுவதில்லை.

இவ்வாறான நிலையில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் குறித்து சிந்திக்காமல் , அவர்களை தொழிலுக்கு அனுப்புவது குறித்து அரசாங்கம் சிந்திக்குமாயின் இதன் மூலம் எதனை எதிர்பார்க்கின்றனர்? இவ்வாறான ஆட்சியாளர்களுக்கு இந்நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்றார்.