கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

302 0

முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு மக்கள் இராணுவம் சுவீகரித்து வைத்திருக்கும் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி 11 ஆவது நாளாக முற்றுகைப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் அம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மக்களின் நிலத்திலிருந்து இராணுவமே வெளியேறு, அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதில் என்ன?, யுத்தம் முடிவுற்று எட்டு வருடங்கள் கடந்த பின்னும் அரசியல் கைதிகளுக்கு விடிவே இல்லையா?, நல்லாட்சி அரசே கேப்பாபிலவு மக்களின் நிலத்தைக்கொடு, மைத்திரி ரணில் ஆட்சி நல்லாட்சியா அல்லது காட்டாட்சியா போன்ற பதாதைகளை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாண உறுப்பினர் எஸ்.மயூரன், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.