சசிகலா, தினகரன், ஓ.பன்னீர் செல்வம் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக பொதுக் குழு கூட்டப்பட்ட விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவில் குழப்பம் இருக்கும் பட்சத்தில் தொண்டர்களே புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பர் என விதி உள்ளது. அப்படி இருக்கையில் அவசர அவசரமாக பழனிசாமி ஊர் ஊராக சென்று பேசி வருகிறார்.
கிருஷ்ணகிரியில் பேசும்போது, “ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி, பதவி வெறி பிடித்தவர்” என்கிறார். ஜெயலலிதா மறைந்த பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு அவரை அவமானப்படுத்தும் வகையில் பதவி வெறிபிடித்து பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தவர் பழனிசாமி. ஒற்றைத் தலைமை வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறவில்லை.
மக்கள் பிரச்சினைகள் குறித்து பழனிசாமி பேசாமல், சுயநலமாக ஒருவர் மீது பழி போட்டு பேசுவதிலேயே குறியாக இருக்கிறார். ஆனால், மக்கள் நலனில் அக்கறைகொண்ட ஓபிஎஸ் இவர்களது விமர்சனங்களுக்கு பதில் கூறப்போவதில்லை. அவர் இன்னும்கட்சிப் பணிகளை முடிக்கவில்லை. இதுவரை 40 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் மாநிலம் முழுவதும் கூட்டங்களை ஓபிஎஸ் நடத்துவார். சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. காலம் தான் பதில் சொல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

