எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம்

170 0

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்தோம்.

எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (8) இடம்பெற்றது.

சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி விகித்த போதே முன்வைத்துள்ளோம்.

அவற்றை நிறைவேற்றுவதாக வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமையவே பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது அவருக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

எனவே எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில அவதானம் செலுத்தப்படும். அத்தோடு எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அவரிடம் மீண்டும் கோருவோம் என்றார்