சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம்

163 0

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ந.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 4,500 விஞ்ஞானிகள் பணியாற்றும் 38 ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் – மத்திய எலக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக இருப்பவர் ந.கலைச்செல்வி. லித்தியம் அயர்ன் பேட்டரி துறையில் இவர் பல பங்களிப்புகளை அளித்துள்ளார். சிஎஸ்ஐஆர் அமைப்பின் தலைமை இயக்குநராக இருந்த சேகர் மாண்டே, கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றார். இதையடுத்து தலைமைப் பொறுப்பை பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே, கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில், சிஎஸ்ஐஆர்தலைமை இயக்குநராக ந.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார் என மத்தியப் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதவிர அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறையின் செயலாளர் பொறுப்பையும் இவர் கவனிப்பார்.

நெல்லையை சேர்ந்தவர்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளவிக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி.இங்குள்ள செயின்ட் ஜோசப் நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும், திருநெல்வேலி காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் படித்துள்ளார்.

சிஎஸ்ஐஆர் மையத்தில் விஞ்ஞானியாக தனது பணியை தொடங்கிய கலைச்செல்வி, எலக்ட்ரோகெமிக்கல் மின்சார சாதனங்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 125-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 6 காப்புரிமைகளும் பெற்றுள்ளார்.

முதல்வர் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-ன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பை தமிழகத்தைச் சேர்ந்தகலைச்செல்வி அடைந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். தமிழ் வழிக்கல்வி, அறிவியலை கற்றுணரத் தடையாகாது என்பதற்கு கலைச்செல்வியின் இந்த சாதனையே சிறந்த சான்று’ என தெரிவித்துள்ளார்.