விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

33 0

 உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” நேர்மையும் பரந்த அனுபவமும் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த், உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக இருப்பது, செஸ் விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்கடி வோர்கோவிச்-க்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) தலைவராக ஆர்கடி வோர்கோவிச் 2-வது முறையாக தேர்வானார். 5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே)நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் தலைவராக ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்கடி வோர்கோவிச் 2-வது முறையாக தேர்வானார். அவருக்கு மொத்தம் 157 வாக்குகள் பதிவானது. அவரை எதிர்த்து போட்டியிட்ட உக்ரைனை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான ஆன்ட்ரி பாரிஷ்போல்ட்ஸ் வெறும் 16 வாக்குகள் மட்டுமே பெற்றார். மற்றொரு தலைவர் வேட்பாளரான பிரான்ஸை சேர்ந்த பச்சார் குவாட்லி, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே, வாபஸ் பெற்றார். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், துணைத் தலைவரானார்.