தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பு- ஒரேநாளில் காற்றாலைகளில் 119 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி

132 0

தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 13 ஆயிரம் காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் காற்று அதிகமாக வீசும்போது காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்து தமிழகத்தின் மின்தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கிறது.

அந்த வகையில் ஆடிமாதமான தற்போது காற்றாலை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுகுறித்து தமிழக காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.கஸ்தூரிரெங்கையன் கூறியதாவது:- தமிழ் மாதமான ஆடியில் வீசி வரும் பலத்த காற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. நேற்றுமுன்தினம் வரை 41.5 சதவீதம் காற்றாலைகளில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது.

சூரியஒளி மின்சக்தி, அனல், நீர்மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு மின் உற்பத்தியில் 4-ல் 3 பங்கு மரபுசாரா மின்சக்தி மூலம் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காற்றாலைகளில் இருந்து 100 மில்லியன் யூனிட்களுக்கும் குறைவான ஆற்றல் பெறப்பட்டு வந்தது.

காற்றின் வேகத்தை பொறுத்து அது சில நேரங்களில் ஒற்றை இலக்கமாக இருக்கலாம். ஆடி பருவத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தமிழக காற்றாலைகளில் இருந்து அதிகபட்ச சக்தியான 119 மில்லியன் யூனிட்டை நேற்று முன்தினம் பெற்றுள்ளது.

முந்தைய ஆடி பருவத்துடன் ஒப்பிடுகையில், நேற்று முன்தினம் பெறப்பட்ட மின்சக்தியின் அளவு மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது, இது அனல் மின் பயன்பாட்டைக் குறைக்கும் என்பதால், தமிழக மின்பகிர்மான கழகத்துக்கு இது பயனளிக்கும். ஜூலை 9-ந்தேதி வரை காற்றாலைகளில் இருந்து பெறப்பட்ட 340 மில்லியன் யூனிட் மின்சாரத்தில் 120.25 சதவீதம் மின்சாரத்தை தமிழக மின்பகிர்மான கழகம் பெற்றுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் வரை காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.