இணையுமா தமிழ் பேசும் கட்சிகள் ?

149 0

“சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோரின் வாதாட்டத்தினைக் கடந்து, ஜனாதிபதி ரணில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக கூறுவதானது, கூட்டமைப்புக்குள் ‘கறுப்பு ஆடுகள்’ உள்ளன என்பதை என்பதை போட்டு உடைத்திருக்கிறது”

தற்போதைய பொருளாதார, மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு சர்வகட்சி அரசாங்கத்தின் ஊடாக தீர்வு காணப் போவதாக, அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமிழ் பேசும் கட்சிகளிடம் இருந்து பெரும்பாலும் சாதகமான பதில்களே கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இ.தொ.கா. ஏற்கனவே, சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயார் என்று அறிவித்து விட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும், அதற்குப் பச்சைக்கொடி காட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றன.

ஏனென்றால் இந்தக் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனும் மட்டும் தான், தனித்து  நிற்கிறார்களே தவிர, அவர்களின் கட்சிகளில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் ராஜபக்ஷவினருடனேயே கூட்டுச் சேர்ந்து விட்டனர்.

அவர்களால் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இணைந்து கொள்வது ஒன்றும் கடினமல்ல. எனவே கட்சித் தலைமையையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்கள் எப்படியாவது சர்வகட்சி அரசுக்கு ஆதரவு கொடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

அதுபோல, இ.தொ.கா. சர்வகட்சி அரசில் இணைகின்ற நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணியினால் வெளியில் நிற்பதில் சிக்கல்கள் உள்ளன.

ஏற்கனவே, நல்லாட்சி அரசில் மனோகணேசனின் கட்சி இடம்பெற்றிருந்ததுடன், அதன் பங்காளிகள் மூவரும் அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர்.

மனோ கணேசன் விலகி நின்றாலும், திகாம்பரமும், இராதாகிருஷ்ணனும், தங்களின் கட்சிகளை இ.தொ.கா.வுடன் போட்டி போடுவதற்கு அமைச்சுப் பதவிகள் முக்கியம் என்று கருதலாம்.

மனோகணேசனும் கூட, இப்போது, பொதுவான மலையக அரசியல் கூட்டு ஒன்றை அமைக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதனூடாகச் செயற்படுவதாயின் தனியனாக நிற்க முடியாது.

எனவே, பல்வேறு நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு தமிழ் முற்போக்கு கூட்டணியும் கூட அரசாங்கத்துடன் இணைய வேண்டிய சூழலில் உள்ளது.

வடக்கு, கிழக்கைத் தளமாக கொண்ட கட்சிகளைப் பொறுத்தவரையில், ஈ.பி.டி.பியும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்திருப்பவை தான்.

தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில் தான், முரண்பட்ட நிலைப்பாடுகளும், கருத்துக்களும் நிலவுகின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அரசாங்கத்துடன் ஒருபோதும் இணையப் போகின்ற கட்சி அல்ல என்பதால், அதன் நிலைப்பாட்டை புதிதாக எதிர்பார்க்க முடியாது.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான, சி.வி.விக்னேஸ்வரன், ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருப்பவர்.

அவர், சர்வகட்சி அரசில் இணைவாரா இல்லையா என்று உறுதியாக கூறமுடியாத நிலையில் அவரது கட்சியின் ஊடகப் பேச்சாளரான அருந்தவபாலனே இருக்கிறார்.

சி.வி.விக்னேஸ்வரன் கட்சிக்குள் கலந்துரையாடுவதும் இல்லை. பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதும் இல்லை என்று, அருந்தவபாலன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ஆனாலும் அவர் இணையமாட்டார் என்ற ஒரு நம்பிக்கை அவரிடம் இருக்கிறது. சி.வி.விக்னேஸ்வரனும் அண்மையில், அரசில் இணைவதால் எதிர்கொள்ளக் கூடிய ஆபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதனால், அவர் சர்வகட்சி அரசுக்கு ஆதரவளித்தாலும், அமைச்சர் பதவியை ஏற்கமாட்டார் என்றே நம்பப்படுகிறது.

அதேவேளை, 10 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

தமிழ் அரசு, ரெலோ, புளொட் என மூன்று கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்பு, இந்த விடயத்தில் ஒன்றுபட்டிருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

கடந்த புதன்கிழமை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

அப்போது, ரணிலுக்கு வாக்களிக்காது போனாலும்,  தங்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை அளித்தமைக்கு நன்றி தெரிவித்து, திரியைப் பற்ற வைத்திருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

அப்போது ரணில் உங்களில் சிலர் எனக்கு வாக்களித்திருக்கின்றனர் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இல்லை என்று சுமந்திரனும், சித்தார்த்தனும் வாதாட இல்லையில்லை என்று ரணில் கூறியிருப்பது, கூட்டமைப்புக்குள் ‘கறுப்பு ஆடுகள்’ இருக்கின்றன என்பதை போட்டு உடைத்திருக்கிறது.

 

 

 

 

கூட்டமைப்பாக முடிவெடுத்தாலும், அதனை மீறி இரகசியமாக வாக்களித்திருக்கும் நிலையில், பங்காளிக் கட்சிகள் ஒன்றாக பகிரங்க முடிவை எவ்வாறு எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி உள்ளது.

எவ்வாறாயினும், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக ரணில் முன்வைத்த கோரிக்கைக்கு சுமந்திரன் அளித்துள்ள பதிலும் சித்தார்த்தன் அளித்துள்ள பதிலும் முரண்பாடானவை.

சித்தார்த்தன், தமது கட்சி அரசில் இணையாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.ஆனால், சுமந்திரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய செயற்திட்டத்தை பரிசீலித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

அவ்வாறாயின் முழுமையாக சர்வகட்சி அரசில் இணையும் கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை என்பதே அதன் அர்த்தம்.

அதேவேளை, இன்னொரு பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது பற்றிய பகிரங்க கருத்தை வெளிப்படுத்தவில்லை.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் மீது அவருக்கு கண் இருப்பதை தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்தியிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி அரசில் இணைந்தால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வரும், இரா.சம்பந்தனால் அந்தப் பதவியை வகிக்க முடியாது என்பதால், கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.

இப்போது ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி அரசாங்கத்தில் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாகவே கூறிவருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி அரசில் இணையாவிட்டால், கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க வழியில்லை.

இந்தநிலையில் செல்வம் அடைக்கலநாதன் சில வேளைகளில், சர்வகட்சி அரசில் இணையவதற்கு சாதகமான சமிக்ஞைகளை காண்பிக்க கூடும்.

எவ்வாறாயினும், அவர் தனது நிலைப்பாட்டை இந்தப் பத்தி எழுதப்படும் வரை அறிவிக்கவில்லை.

சர்வகட்சி அரசில் இணைவது குறித்து, கூட்டமைப்பாக ஒன்றிணைந்து, முடிவை எடுத்தாலும், அது தமிழ் மக்களால் ஆதரிக்கப்படுமா என்ற சந்தேகங்கள் உள்ளன.

ஏனென்றால், பெரும்பாலான தமிழ் மக்கள் அரசாங்கத்தில் இடம்பிடித்திருப்பவர்களை ஒருபோதும் தங்களின் பிரதிநிதிகளாக பார்த்தில்லை.

அதனால் தான், அரசாங்கத்தில் ஒட்டியிருப்பவர்களால், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறது.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணையும் போது, அவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தமிழ் மக்களின் நலன்களையோ நிலைப்பாட்டையோ வலியுறுத்த முடியாமல் போகும். அவ்வாறு வலியுறுத்தினாலும் அது பெரும்பான்மையினர் மத்தியில் எடுபடாது.

இதனால் அவர்களும் கூட அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே சிக்கிக் கொண்டு விடுவார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து அரசாங்கத்தின் பக்கம் தாவியவர்கள் எல்லோரும் எதிர்கொண்ட சிக்கல் இது.

தேசிய அரசாங்கம் என்றாலும், சர்வகட்சி அரசாங்கம் என்றாலும், வடிவங்களில் தான் வேறுபாடே தவிர, உள்ளடக்கம் ஒன்று தான்.

எனவே அரசாங்கத்துடன் இணைவது, என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகப்பெரிய அமிலச் சோதனையாகவே இருக்கும்.

இரா.சம்பந்தனின் ஆதிக்கம் கூட்டமைப்புக்குள் குறையத் தொடங்கியுள்ள இந்த சூழலில் – (அவர் ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் பங்கேற்கவில்லை)- சர்வகட்சி அரசில் இணையும் முடிவு எடுக்கப்பட்டால், கூட்டமைப்புக்குள் மேலும் குழப்பங்களையும், பிரச்சினைகளையுமே உருவாக்கும்.

ஏனைய சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையில் இணையாமல் இருந்தால் தான் பிரச்சினை. கூட்டமைப்பையும், தமிழ் மக்கள் கூட்டணியையும் பொறுத்தவரையில் இணைந்தால் தான் வில்லங்கமே ஆரம்பமாகும்.

ஆக, ஜனாதிபதி ரணில் தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் அமைந்தால், நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகிறதோ இல்லையோ, பல கட்சிகள் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கபில்