சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்

99 0

இலங்கை முன்னெடுத்துள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள ஜப்பானிய பிரதமர் பூமியோ கிசிடா , பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மிக விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜப்பானிய பிரதமர் பூமியோ கிசிடா அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்து கடிதத்தில் ஜப்பான் பிரதமர், ஜப்பான் மக்களினதும் அரசாங்கத்தினதும் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜப்பானிய பிரதமர், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மிக விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த ஜப்பானிய பிரதமர், இந்து சமுத்திரத்தில் சேவை மையமாக இலங்கையை பெரும் முன்னேற்றம் கொண்ட நாடாக மாற்ற முடியும் என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்த பிரதமர், ஜப்பான்-இலங்கை ஒத்துழைப்பின் வளர்ச்சிக்காகவும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசிபிக் பிராந்தியத்திற்காகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன்  உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.