கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும்: தமிழிசை

256 0

கவர்னர் அவசரப்படாமல் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசியலில் உள்ள குழப்பத்தை கவர்னர் தெளிவாக பார்த்து வருகிறார். கவர்னர் அமைதியாக இந்த சூழ்நிலையை கண்காணித்து வருகிறார். முதல்-அமைச்சர் பன்னீர்செல்வமும். அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவும் கவர்னரை சந்தித்து உள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா? சுதந்திரம் இல்லாத நிலையில் இருக்கிறார்களா? என்ற தெளிவற்ற நிலை உள்ளது.

தெளிவான நிலை வர வேண்டும் என்பது பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு ஆகும். கவர்னர் அவசரப்படாமல் இருக்கிற சூழ்நிலையை தெளிவாக உணர்ந்து ஆதரவு தருபவர்கள் முழுமையான சுதந்திரத்துடன் ஆதரவு தருகிறார்களா? கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? என்பதையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

உச்சகட்டத்தில் இருக்கும்போது தெளிவான நிலைப்பாடு எடுக்க முடியாது. முதல்-அமைச்சரே நாங்கள் தாக்கப்பட்டோம், கட்டாயப்படுத்தப்பட்டோம், பயமுறுத்தப்பட்டோம் என்று கூறுவது தமிழக அரசியலுக்கு ஆரோக்கியமாக இருக்காது. இதுபற்றிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை சசிகலா தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

குழப்பங்கள் தீர்ந்த பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் நிலை வரும்போது சட்டசபையை கூட்டி யாருக்கு பலம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.