சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதிக்கு 4 கோரிக்கைகளை முன்வைத்துள்ள டலஸ்

147 0

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவின் தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம்,இடைக்கால அரசாங்கத்தின் காலவரையறை தொடர்பில் இச்சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்து அது சமூக பிரச்சினையாக தோற்றம் பெற்று அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்த பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்,
சர்வக்கட்சி அரசாங்கத்தை சிறந்த முறையில் ஸ்தாபிப்பதற்கு தமது அணியினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் எனவும், சர்வக்கட்சி அரசாங்கத்தில் சகல அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு தாம் ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்துள்ளதுடன்,இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு நான்கு பிரதான நிபந்தனைகளை முன்வைப்பதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக மோசமான நிலையை அடைந்துள்ளதை சகல தரப்பினரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.அமைச்சரவை அமைச்சுக்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுக்களின் நியமனம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒரு குழுவாக தாம் எவ்வித அமைச்சு பதவிகளையும் பெற்றுக்கொள்ள போவதில்லை இருப்பினும் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்.

பாராளுமன்ற உப குழுக்களில் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சகல தரப்பினரது ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நான்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.