எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்ட போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து பின்னடைவு

124 0

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கடந்த மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் மற்றும் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நீதிபதி சதீஷ்குமார், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அப்போது கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார்.

இந்த நிலையில்தான் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணயை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் செயல் நீதித் துறையை தரம் தாழ்த்துவதாக உள்ளது என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார். ஐகோர்ட்டு நீதிபதிகளின் இது போன்ற தொடர் கண்டனங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சட்ட போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் அ.தி.மு.க. தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.