முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருட்கள் மீளவும் பிரதேச செயலகத்திடம் நேற்று (03) கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினை சோதனையிட வேண்டும் என பொலிஸார் அனுமதி கோரியிருந்தமையை பிரதேச செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் மற்றும் வெளிப்படைத் தன்மையினை பேணுவதற்காகவும் பிரதேச செயலகத்தினை சோதனையிடுவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதி வழங்கி இருந்தார்.
பிரதேச செயலகத்தினை சோதனையிட்ட பொலிஸார் அத்தியவசிய தேவைக்கு இருந்த எரிபொருளினை எடுத்துச் சென்றனர்.
இதில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு பயன்படுத்துவதற்காக அலுவலகத்தில் இருந்த 4.5 லீட்டர் மண்ணெண்ணை மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அலுவலக மின்பிறப்பாக்கி மற்றும் அலுவலக வாகன பாவனைக்கான 50 லீட்டர் டீசல் பொலிஸாரினால் எடுக்கப்பட்டது.
இதன் பின்னர் பிரதேச செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் சோதனை நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டனர்.
இதன்போது விடுதியில் பிரதேச செயலாளரின் அன்றாட சமையல் மற்றும் மின்சார துண்டிப்பு நேரங்களில் விளக்குக்காக பயன்படுத்துவதற்காக இருந்த 5 லீட்டர் மண்ணெண்ணை மற்றும் பிரதேச செயலாளரின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் என்பதால் வீட்டில் ஏதும் அவசர தேவையிருப்பின் சென்றுவருவதற்காக ; சாதாரண மக்கள் பெற்றுக் கொள்வது போல் தனது மோட்டார் சைக்கிளுக்கு பயன்படுத்துவதற்கான 10 லீட்டர் பெற்றோலினை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்ட குறித்த எரிபொருளினை நேற்று மீண்டும் பிரதேச செயலகத்திடம் பொலிஸார் கையளித்துள்ளனர்.

