சென்னையில் தி.மு.க. வட்ட செயலாளர் தேர்தல் பதவிகளை பெற நிர்வாகிகளிடையே கடும் போட்டி

93 0

தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு பேரூர் கழகம், ஒன்றிய கழகங்களுக்கும் தேர்தல் முடிந்துவிட்டது. மாநகராட்சி பகுதிகளில் பகுதி கழகங்களுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இப்போது சென்னையில் வட்ட கழக செயலாளர் பதவிக்கு நேற்று முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னை தெற்கு மாவட்டத்தில் 82 வட்டச்செயலாளர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதில் மதுரவாயல் தொகுதியில் நேற்று தேர்தல் முடிந்து விட்டது.

இன்று சோழிங்கநல்லூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள 13 வட்டச்செயலாளர் பதவிக்கு 8-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 9-ந் தேதி வரை தெற்கு மாவட்டத்தில் தேர்தல் நடைபெறுவதாக மாவட்ட செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தியாகராய நகர் தொகுதியில் மொத்தம் உள்ள 14 வட்ட செயலாளர் பதவிக்கு 5-ந் தேதி (நாளை) தேர்தல் நடைபெறுகிறது. மயிலாப்பூர் தொகுதியில் உள்ள 13 வட்ட செயலாளர் பதவிக்கு 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அண்ணாநகரில் உள்ள 14 வட்டத்துக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் 15 வட்டத்துக்கு நாளையும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் உள்ள 14 வட்டத்துக்கும் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுவதாக மாவட்டச்பொறுப்பாளர் நே.சிற்றரசு தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தொகுதியில் உள்ள 15 வட்ட செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

6-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். ஒரு வார்டுக்கு 2 வட்டச் செயலாளர் பதவி வரும் வகையில் பிரிக்கப்பட்டு உள்ளது. பெரிய வார்டாக இருந்தால் 3 வட்டச் செயலாளர் வரும் வகையில் பதவி போடப்படுகிறது. வட்ட செயலாளர் பதவியை பெற கடும் போட்டி நிலவுகிறது. 1 வட்ட செயலாளர் பதவியை 10 பேர் வரை கேட்கிறார்கள். கட்சி மேலிடம் தேர்தல் நடத்தாமல் சமரசம் செய்து ஆட்களை நியமிக்க வேண்டும் என்று கூறி உள்ளதால் சமரசம் செய்து ஒருவரை நியமிக்கின்றனர். இந்த தேர்தல்கள் 9-ந் தேதியுடன் முடிந்த பிறகு பகுதி செயலாளர் தேர்தல் சென்னையில் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.