ஜனநாயக உறுதிப்பாட்டுக்குத் தேவைப்படுவது சட்டத்தின் ஆட்சியேயன்றி அடக்குமுறைகளல்ல – மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் கூட்டாக வலியுறுத்தல்

25 0

ஜனாதிபதியின் அவசரகாலநிலைப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளமையானது நிறைவேற்றதிகாரமும் சட்டவாக்கமும் தற்போது அடக்குமுறைப்பாதையில் செல்வதையே காண்பிக்கின்றது. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அமைதிவழியிலான கருத்து வெளிப்பாடு அவசியம் என்பதுடன் அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்குத் தேவைப்படுவது சட்டத்தின் ஆட்சியும் சுமுகமான கலந்துரையாடலுமேயன்றி அடக்குமுறையல்ல என்று சுட்டிக்காட்டியிருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஆகவே போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரவேண்டும் என்றும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

அமைதிப்போராட்டக்காரர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் தொடர்பில் அம்பிகா சற்குணநாதன், அமாலினி டி சேரா, பவானி பொன்சேகா, தில்ருக்ஷி ஹந்துனெத்தி, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரிட்டோ பெர்னாண்டோ, கலாநிதி ஜெஹான் பெரேரா உள்ளிட்ட 222 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், தேசிய சமாதானப்பேரவை, சமூக நீதிக்கான பெண்கள் இயக்கம் உள்ளிட்ட 70 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஆயுதமேந்தாது அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் பழிவாங்கல்கள் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளிலுமான தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

போராட்டக்காரர்களைக் கடத்துதல், கைதுசெய்தல், அச்சுறுத்துதல் மற்றும் அடக்கியொடுக்குதல் உள்ளடங்கலாக மனதிற்கு சஞ்சலமேற்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகத் தீவிரமடைந்துவரும் போக்கு தொடர்பில் நாம் அதீத கரிசனை கொண்டுள்ளோம்.

கடந்த ஜுலை மாதம் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுடன் சம்பந்தப்பட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் மற்றும் ஏனைய முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பலருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்திருப்பதாக ஊடக செய்திகள் மூலம் அறியமுடிவதுடன், கடந்த மாதம் 27 ஆம் திகதி தேவாலயம் ஒன்றுக்குச்சென்ற அப்பகுதி பொலிஸார் அங்கிருந்த வதிவிட குருவானவரிடம் அருட்தந்தை ஜீவந்தவைக் கைதுசெய்வதற்குத் தமக்குக் கொழும்பிலிருந்து உத்தரவு கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதுமாத்திரமன்றி முன்னரங்கப்போராட்டக்காரர்கள் மற்றும் போராட்டத்தை அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை இலக்குவைத்தும் பல்வேறு வடிவங்களில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அரசாங்கத்தின் தவறான முகாமைத்துவமும் ஊழல் மோசடிகளுமே எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப்பொருட்களின் பற்றாக்குறை உள்ளடங்கலாக நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டமைக்குப் பிரதான காரணம் என்பதை பொதுமக்கள் பலரும் புரிந்துகொண்டதன் விளைவாகவே கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

பெருமளவிற்கு அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்கள் கடந்தகாலத் தவறுகளுக்கான பொறுப்புக்கூறலையும் ஆட்சிமுறைமையில் மாற்றத்தையுமே கோரின.

இருப்பினும் அதற்கு அரசாங்கம் காண்பித்துவரும் துலங்கலில் நியாயமற்ற முறையிலான அதிகாரப்பிரயோகமும் அச்சுறுத்தல்களும் உள்ளடங்கியிருப்பதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமைதாங்கியவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குசெய்தோர் என நம்பப்படுபவர்களுக்கு எதிரான சட்டரீதியான பழிவாங்கல்களும் இடம்பெற்றுவருகின்றன.

பாதிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதும், அதற்குப் பதிலாக அரசாங்கம் அடக்குமுறையைப் பிரயோகிப்பதும் இலங்கைக்குப் புதிதல்ல. ஏற்கனவே இதனைப்போன்று நீதியையும் தீர்வையும் கோரிய வடக்கு, கிழக்கு மக்கள் வன்முறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.

மக்களின் தன்னெழுச்சிப்போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டிலிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ அவரது ஜனாதிபதிப்பதவியை இராஜினாமா செய்ததன் விளைவாக ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க அதற்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்களைப் புகழ்ந்ததுடன், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதமராகப் பதவி வகித்தபோது உத்தரவாதமும் அளித்தார். இருப்பினும் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் தவறான பிரசாரங்களை செய்ததுடன் வன்முறைகளையும் பிரயோகித்தார்.

அடுத்ததாக அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியமையானது இதனுடன் தொடர்புபட்ட சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமையவில்லை. அத்தோடு நீதித்துறையினால் கையாளப்படவேண்டிய அல்லது நீதித்துறையின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படவேண்டிய பல அதிகாரங்கள் எவ்வித சுயாதீன மேற்பார்வையுமின்றி இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருப்பது அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள பல அடிப்படை உரிமைகள் மீறப்படும் வகையில் அதிகாரங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் என்பன தன்னிச்சையாகப் பயன்படுத்தப்படுவதற்கும் அதிகாரத்துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்குமே வழிவகுக்கும். அதுமாத்திரமன்றி ஜனாதிபதியின் அவசரகாலநிலைப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளமையானது நிறைவேற்றதிகாரமும் சட்டவாக்கமும் தற்போது அடக்குமுறைப்பாதையில் செல்வதையே காண்பிக்கின்றது.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அமைதிவழியிலான கருத்து வெளிப்பாடு அவசியம் என்பதுடன், தற்போதைய நெருக்கடிநிலையில் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கும் இது இன்றியமையாததாகும்.

மேலும் அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்குத் தேவைப்படுவது சட்டத்தின் ஆட்சியும் சுமுகமான கலந்துரையாடலுமேயன்றி அடக்குமுறையல்ல. ஆகவே போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருவதுடன், ஏற்கனவே வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும். அமைதி வழியிலான ஆர்ப்பாட்டங்களும் மனித உரிமைகளைப் பாதுகாத்தலும் குற்றச்செயல்கள் அல்ல என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ளவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது .