அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எதிர்வரும் வார இறுதியில் சீனாவுக்குச் சொந்தமான நவீன கப்பல் பிரவேசிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யுமாறு புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சீனக்கப்பலின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சீனாவுக்குச் சொந்தமான யுவான் வாங்-5 என்ற விஞ்ஞான ஆய்வுக்கப்பலானது எதிர்வரும் வார இறுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இராஜதந்திர ரீதியில் ஏற்படும் பதற்றத்தினை தவிர்ப்பதே பொருத்தமான நகர்வாக இருக்கும்.
இந்தியாவைப்பொறுத்தவரையில், குறித்த கப்பல் அம்பாந்தோட்டைக்கு பிரவேசிப்பதானது, தனது தென்பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
இதனை இந்தியா வெளிப்படையாகவே அறிவித்துள்ள நிலையில் தான், சீனக்கப்பலின் வருகைக்கு இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கின்றது.
தற்போதைய சூழலில் இந்தியாவே இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கு அதிகளவில் உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிவருகின்றது.
அவ்விதமான நிலையில், இந்தியாவின் கரிசனைக்கு உட்பட்ட விடயமொன்றை முன்னெடுப்பதானது, பொருத்தமான அணுகுமுறையாக அமையப்போவதில்லை. குறிப்பாக, தமிழ் மக்களையும், ஏனைய இனக்குழுமங்களையும் அது பாதித்துவிடும் அச்சமான நிலைமைகளும் ஏற்படும் சூழலும் உள்ளது.
அந்த வகையில், இந்திய, இலங்கை இடையே காணப்படும் இருதரப்பு உறவுகளைக் கருத்திற்கொண்டும், இராஜதந்திர பதற்றமான சூழலை தவிர்க்கும் வகையிலும் சீனக் கப்பலுக்கான அனுமதி வழங்கும் தீர்மானத்தினை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றுள்ளது.

