நெடுந்தீவில் நடைபெற்ற வடமாகாணசபையின் குறைநிவர்த்தி நடமாடும் சேவை

393 0

10-1024x683வடமாகாணசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இன்று வியாழக்கிழமை (14.07.2016) குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை நடாத்தியுள்ளது.

இக்குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் அமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மீன்பிடி அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்கள் பங்கேற்றிருந்தன. இவற்றோடு, நில அளவைத் திணைக்களம், தொழில் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம் உட்பட மத்திய அரசுக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களும் கலந்துகொண்டு தங்கள் சேவைகளை வழங்கியிருந்தன.

வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இக்குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினாகள் விந்தன் கனகரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை, வே.சிவயோகன் ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டி ருந்தார்கள்.

பின்தங்கிய பிரதேசங்களுக்கு நேரடியாகச்சென்று அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைப்பதெற்கென வடக்கு மாகாணசபையால் மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுவரும் குறைநிவர்த்தி நடமாடும் சேவைத் தொடரில் நெடுந்தீவில் இடம்பெற்றது 6வது குறைநிவர்த்தி நடமாடும் சேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஏழாவது குறைநிவர்த்தி நடமாடும் சேவை விரைவில் மருதங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.