ரெட் அலர்ட் எச்சரிக்கை- தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நின்று செல்பி எடுக்க தடை

261 0

நெல்லை, தென்காசி, குமரி உள்பட 7 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) வரை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தாலும் மழையின் தாக்கம் சற்று குறைவாகவே உள்ளது. எனினும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே அரசு உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்திற்கு தமிழக பேரிடர் மீட்பு குழு வந்துள்ளது. தமிழக பேரிடர் மீட்பு குழு சார்பில் ஜெயராணி தலைமையில் 30 பேர் கொண்ட குழு நெல்லைக்கு வந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், அவர்கள் அச்சப்படாமல் இருக்கவும் அம்பை பூக்கடை பஜாரில் இருந்து பேரணியாக சென்று பேரிடர் மீட்பு குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்று தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களை பார்வையிட்டனர். அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலமாக அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, சேரன்மகாதேவி, முக்கூடல், தாழையூத்து, சீவலப்பேரி உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்கள் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க செல்லவேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றின் பக்கம் அழைத்து செல்லவேண்டாம் எனவும், ஆற்றை வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.