இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துகின்ற எந்த செயற்பாட்டையும் ஏற்க மாட்டோம் : செல்வம்

184 0

இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம் செயல்படவில்லை.

ஏனெனில் இந்தியாவினுடைய புலனாய்வு அறிக்கையின் படி சீனாவினுடைய உளவு கப்பல் வருகை என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரிய ஒரு இடைவெளியை கொண்டு வரும் என நாங்கள் நினைக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (2) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கின்றது.

சீனாவின் உளவு பார்க்கும் கப்பல் இலங்கை நோக்கி வருகை என்பதை இலங்கை அரசு மற்றும் ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்.

எங்களைப் பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை வருமாக இருந்தால் அதனை அனுமதிக்க முடியாது என்பதில் எமது மக்கள் உறுதியாக உள்ளார்கள்.

தற்போது இந்திய மீனவர்களின் வருகை என்பது கவலையான விடயமாக இருந்தாலும் தமிழ் பேசும் சமூகமாகிய நாங்கள் இந்தியாவை ஒருபோதும் கைவிட முடியாது.

அதை விட தமிழ்நாடு இன்றைக்கும் எங்களோடு இருந்து கொண்டிருக்கிறது.

எமது ஈழப் பிரச்சனையில் எமக்காக பல பேர் தங்களை எரித்து தற்கொலை செய்து இருக்கிறார்கள் .
அப்படியான ஒரு சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கின்ற சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் எமது தமிழ் தரப்பு எதிர்க்கும் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அண்மையில் சீனாவினுடைய தூதுவர் இங்கு வந்து ஒரு சர்ச்சையை கிளப்பி சென்ற பின்னணியில் பல எதிர்ப்புகளை எமது மக்கள் காட்டியிருந்தார்கள்.

ஆகவே இலங்கை அரசாங்கம் ராஜதந்திர நடவடிக்கையாக இரண்டு நாடுகளையும் சாதகமாக வைத்திருக்க வேண்டும் என்றால் இந்தியாவை பகைக்க கூடாது என்பது எனது கருத்து.

ஏனெனில் இந்தியா தான் பொருளாதார ரீதியில் விழுந்து கிடக்கின்ற இலங்கையை அண்மைக்காலமாக கை கொடுத்து தூக்கி வருகிறது.

எமது தமிழர்களை பொருத்தமட்டில் இந்தியா தான் எமக்கான தீர்வை பெற்று தரக்கூடியதும் எங்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய வல்லமை பொருந்தியதாக இருக்கிறது.

இந்த விடயத்தில் சீனாவின் வேவு பார்க்கும் கப்பல் வருகையை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

இல்லையெனில் இந்தியா இலங்கையை விட்டு அதிக தூரம் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஆகவே இந்தியாவை பகைப்பதால் இலங்கைக்கு ஒருபோதும் நன்மை கிடைக்காது. அதை தமிழர்களாகிய நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

மேலும் முல்லைத்தீவில் எமது மீனவர் சமாசம் ஒன்று கூடி இந்த மீனவ பிரச்சினை தொடர்பான ஆதங்கத்தை வெளியிட்டு செய்திருந்தது உண்மையில் அது ஒரு நியாயமான கோரிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம். அமைச்சரிடம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் எமது மீனவர்கள் நான்கு மாதங்களுக்கு மேலாக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்று நேரடியாக தெரிவித்து அது உடனடியாக நடவடிக்கைக்கு வர வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

தற்போது அந்த தீர்மானத்தின் படி அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்து இருந்தார்கள்.

எமது மீனவர்களும், விவசாயிகளும் போராட்டத்தில் இறங்கினால் நாடு தாங்காது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஏற்கனவே கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் விவசாயிகளுடைய வயிற்றில் கை வைத்ததன் பின்பு தான் அவர் நாட்டை விட்டு ஓடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதேபோல் எமது மீனவ சமூகத்தையும் நோகடிக்கும் அல்லது அவர்களுடைய வயிற்றில் அடிக்கின்ற செயற்பாடுகளை இந்த அரசும் செய்யுமானால் அவர்களுடைய போராட்டம் வெடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே பெட்ரோல் , டீசலுக்கு கொடுக்கின்ற முன்னுரிமையை மண்ணெண்ணெய்கும் வழங்க வேண்டும்.

இதனால் எமது விவசாயிகளும் மீனவ சமூகமும் பயனடைய வேண்டும். எனவே முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளும் மீனவர்களும் விடும் கோரிக்கையை நிறைவு செய்து கொடுக்க வேண்டும் நாம் ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் மீண்டும் வலியுறுத்தி கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்தார்