கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்!

362 0

தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும் அநீதியின் கொடுங்கரங்களும் என்றைக்குமே இரசிப்பதில்லை; அனுமதிப்பதில்லை.

சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்துவிட்ட தமிழ் மக்களின் உரிமை மீட்புப் போராட்டங்கள், நாட்டின் 69வது சுதந்திர தினம் தாண்டியும் நீண்டு வருகின்றன. கொழும்பு, காலி முகத்திடலில் பெரும் இராணுவ அணிவகுப்புடன் வெற்றி மனநிலையோடு தென்னிலங்கையினால் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த போது, வடக்கு- கிழக்கிலுள்ள மக்கள் பெரும் ஏமாற்றங்களோடு அல்லாடிக் கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடிகளோடு நீதிக் கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு இறங்கினார்கள். முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்களோ தமது காணிகளை மீட்கும் உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் காணி மீட்புப் போராட்டம் இந்தப் பத்தி எழுதப்படும் (பெப்., 07 காலை) வரை முடிவுக்கு வரவில்லை. எட்டாவது நாளாக நீண்டு செல்கின்றது. 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையிடமிருந்து மீட்டெடுக்கும் முகமான போராட்டத்தையே கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் போராட்டத்தையே வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டவர்கள். அதாவது, அரசாங்கப் படைகளின் ஆக்கிரமிப்பும் அதனால் தொடர்ந்த இடப்பெயர்வும் ஆயுதப் போராட்டமும் போராட்டக்களத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொள்ளும் பக்குவத்தைத் தமிழ் மக்களுக்கு ஏற்கெனவே வழங்கியிருக்கின்றன. கேப்பாபுலவு போராட்டக்களம் அதனை மீளவும் பதிவு செய்கின்றது. எந்தவித போலி வாக்குறுதிகளுக்கும் மயங்காத போராட்டக்காரர்களின் மனவுறுதி, கொட்டும் பனியிலும் கொழுத்தும் வெயிலிலும் தொடர்கின்றது. குழந்தைகள் தங்களது கல்வி நடவடிக்கைகளைத் தமது பெற்றோர் முன்னெடுத்துள்ள போராட்டக்களத்திலேயே தொடர்கின்றனர். உணவு அங்கேயே சமைத்துப் பரிமாறப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில், போராட்டத்தின் மூர்க்கமான முனைப்பை கேப்பாபுலவு மக்கள் பிரதிபலித்திருக்கின்றார்கள். தொடர் அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் முடியாத பட்சத்தில் வாக்குறுதிகளின் வடிவில் இழுத்தடிப்புக்கான காரணங்கள் வரையில் அரசாங்கத்தினாலும் அதன் சார்ப்புத் தளங்களினாலும் செய்யப்பட்டு விட்டன. ஆனாலும், அந்தப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. காணிகளை விடுவிப்பதற்கான தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படவில்லையெனில் போராட்டக்களத்தினை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லப்போவதாக அறிவித்திருக்கின்றார்கள். அது, தம்முடைய உயிர்களை மாய்த்துக் கொள்வதில் முடியும் என்றும் போராட்டக்காரர்கள் ஏமாற்றத்தின் அலைக்கழிப்பின் உச்சத்தில் தெரிவித்திருக்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாதம் வவுனியாவில் முன்னெடுத்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளில் அரசாங்கம் அளித்த வாக்குறுதியோடு முடிவுக்கு வந்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பற்றுறுதியோடு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் வவுனியா உண்ணாவிரதப் போராட்டமும் கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டமும் முக்கியமானவை. ஏனெனில், இந்தப் போராட்டங்களின் பின்னாலுள்ள வைராக்கியம் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை சார்ந்தது. சுயலாப அரசியல் முனைப்புகளும் நிகழ்ச்சி நிரலும் இந்தப் போராட்டக்களங்களை சுவீகரித்துக் கொள்ள நினைத்தாலும் அதனை மக்கள் குறிப்பிட்டளவில் புறந்தள்ளி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் போராட்டத்தினை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆம்! அப்படிக் கொள்ள முடியும்.

தமிழ்த் தேசியப் போராட்டம் ஆரம்பித்தது முதல், பல தன்னெழுச்சிப் போராட்டங்களை நடத்தியிருக்கின்றது. கட்சி மற்றும் அமைப்புகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்களையும் பெரும் முனைப்போடு நடத்தியிருக்கின்றது. ஆனால், தற்போது தோற்றம் பெற்றுள்ள போராட்டக்களம் தன்னெழுச்சி சார்பிலானது மட்டுமல்ல, அதனைத் தாண்டிய வைராக்கிய மனநிலை கொண்டது. இந்த வடிவத்தை நோக்கி, மக்களைப் பெருவாரியாகக் கொண்டு வருவது என்பது அவ்வளவு இலகுவானது அல்ல. ஆனால், இந்தப் போராட்ட வடிவத்தின் பின்னால் இணைபவர்கள் உண்மையிலேயே வைராக்கியம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஏனெனில் கவனக் கலைப்பான்களினால் கலைந்து போகக் கூடிய கூட்டத்தினைப் பெருவாரியாகக் கூட்டுவதினால் எந்தப் பயனும் இல்லை. அதனால், திடகாத்திரமான, பற்றுறுதியுள்ள போராட்டத்தினைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில், கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம், மீண்டும் முக்கியமான செய்தியைத் தமிழ் மக்களிடையே பதிவு செய்கின்றது.

உண்மையிலேயே போராடிக் களைத்த மனநிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். அது, 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் போராட்டத்தினால் ஏற்பட்டது. அதனை இலகுவில் கடந்து வர முடியாதுதான். ஆனால், ஆசுவாசப்படுத்தலுக்கான நேரம் சற்று அதிகமாகிக் கொண்டிருக்கின்ற போது, அடுத்த கட்ட ஆக்கிரமிப்பினை எதிரி மேற்கொண்டு விடுவான் என்கிற நிலையில், சற்று சடுதியாகச் சுதாகரித்துக் கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. அது, உண்மையான, உறுதியான போராட்டங்களை நோக்கி நகரவும் வேண்டும்.

தற்போதுள்ள போராட்டத்துக்கான சவால், போராட்டக்களங்களை எவ்வாறு மீள வடிவமைத்துக் கொள்வது என்பது சார்ந்ததுதான். ஏனெனில், இந்தப் போராட்டக்களம் கேப்பாபுலவோடு முடிந்து போய்விடக் கூடாதவை. அது, காணி மீட்புப் போராட்டங்கள் தாண்டி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியையும் அரசியல் கைதிகளில் விடுதலையையும் அரசியல் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகளுக்கான அழுத்தங்களோடு தொடர வேண்டும். அது, தென்னிலங்கைக்கு எதிரான அழுத்தத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அழுத்தத்தை வழங்க வேண்டும்.

மேல் மட்டத்தில் மாத்திரம் உரையாடவும் பேசிக்கொள்ளவும் முயலும் ஒரு தளமே தமிழ்த் தேசியப் பரப்புக்குள் தற்போது வீச்சம் பெற்றுள்ளது. அது, அவ்வளவு பற்றுறுதி சார்ந்தது அல்ல. மாறாக, கட்சிகள், அமைப்புகளுக்கிடையிலான ‘ஈகோ’ மனநிலை சார்ந்ததாகவே அதிகமாகத் தன் இயங்கு நிலையைக் கொண்டிருக்கின்றது. அந்தத் தளத்திடம் குறிப்பிட்டளவான ஆளுமைக்குறைபாடு உண்டு. அந்தத் தளத்தினையும் உலுக்கும் அளவுக்கான உறுதிப்பாட்டினை கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் போன்ற களங்களின் நீட்சியினால் பதிவு செய்ய முடியும்.

இந்த இடத்தில், கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் போன்ற போராட்டக்களங்கள், தமிழ் மக்கள் மத்தியில் எதிர்காலத்தில் திறக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு, தென்னிலங்கையும் அதன் சார்ப்புத் தளங்களும் கண்கொத்திப் பாம்பாக இயங்கி வருகின்றன. வெளித்தோற்றத்தில் ஜனநாயக இடைவெளியொன்றை வடக்கு, கிழக்கில் அனுமதிப்பது போன்று காட்டிக் கொண்டு, அடுத்தபடி நிலைகளில் தேசிய பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டு அச்சுறுத்தலான நிலையைத் தொடர்ந்தும் தக்க வைப்பதில் அரசாங்கம் முனைப்பாக இருக்கின்றது. அது, முன்னாள் போராளிகளை அச்சுறுத்தலானவர்கள் என்கிற தோரணையிலான கதைகளைப் பிரதானமாகப் பின்னிக் கொண்டு, காய்களை நகர்த்துகின்றது.

அத்தோடு, வாள் வெட்டுக்குழுக்கள் என்கிற போர்வையில் வன்முறைக்குழுக்களை வடக்கு, கிழக்கில் ஏவிவிட்டு அல்லது ஏற்பாடு செய்து அவற்றின் மீது கவனத்தினைத் திருப்பிக் கொள்வதில் தேசிய பாதுகாப்புத் தரப்பு தொய்வின்றிக் காரியங்களை ஆற்றுகின்றது. அதன்மூலம், தமிழ் மக்களின் போராட்டங்கள் மீதான ஆன்ம பலத்தினைச் சிதைக்கலாம் என்றும் கருதுகின்றன. அதன்சார்பிலான நிகழ்ச்சி நிரல்களையும் கடந்த நாட்களில் அவதானித்து வந்திருக்கின்றோம்.

எழுக தமிழ்ப் பேரணி போன்ற வெகுஜன கவர்ச்சி மிக்க போராட்டங்கள், தமிழ்த் தேசியப் போராட்டக்களத்துக்கு மிகவும் அவசியமானவை. ஒருங்கிணைக்கப்பட்ட கோரிக்கைகளின் சார்பிலான அடையாளப்படுத்தல்களைத் தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்கு உதவுபவை; ஊடகக் கவனம் பெறுபவை. ஆனால், கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம், ஒரு பிரதான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, தீர்வினைக் கோருவது; அவசரமானது. தமிழ்த் தேசியப் பரப்பு, கூட்டுக் கோரிக்கையுடனான போராட்டங்களையும் தனிப்பட்ட நேரடித் தீர்வை அவசரமாகக் கோருகின்ற போராட்டங்களையும் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணம் இது. ஒன்றையொன்று, தாங்கிப் பிடிப்பதற்கு இரு வடிவங்களும் உதவக்கூடியன. கூட்டுக் கோரிக்கைப் போராட்டக்களத்தில் சுயநல அரசியல் தன்னுடைய காரியங்களை ஆற்றுவதற்கான வாய்ப்புகள் குறிப்பிட்டளவில் இருக்கலாம். ஆனால், நேரடியான தீர்வினைக் கோரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம் போன்றவை, சுயநல அரசியலை இலகுவாகப் புறந்தள்ளக் கூடியன; கொஞ்சம் ஆக்ரோசமானது.

கடந்த இரண்டு வருடங்களில், போராட்டக்களங்களை நோக்கிய தமிழ் மக்களின் வருகை ஆரோக்கியமான முறையில் இருந்திருக்கின்றது. குறிப்பாக, நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் போராடிக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள் போராட்டக்களங்களை நோக்கி வர ஆரம்பித்திருக்கின்றார்கள். அதுபோல, கூட்டுக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தளமும் நேரடிக் கோரிக்கைகளுக்கான தளமும் மெல்ல மெல்ல வீச்சம் பெற்றிருக்கின்றன; ஒன்றையொன்று தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ் பேரணியும், கேப்பாபுலவு மக்களின் போராட்டமும் முன்னோக்கிய கட்டங்களாகக் கொள்ளக் கூடியவை.