தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்குமா?- அண்ணாமலை பதில்

251 0

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழா நேற்று முன்தினம் முடிந்தபின்னர் பிரதமர் நரேந்திர மோடி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இரவு தங்கினார். அப்போது அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள். அந்தச் சந்திப்பு முடிந்தவுடன் கவர்னர் மாளிகை வெளியே நள்ளிரவில் நிருபர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் தமிழக கலாசாரத்தை சரியாக பிரதிபலிக்கும்வகையில் அற்புதமான காட்சியை வடிவமைத்திருந்தார். இதன் மூலம் 5 ஆயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கக்கூடிய நமது பாரம்பரியத்தை உலகம் முழுவதும் தமிழக அரசு எடுத்துச் சென்றிருக்கிறது. பிரதமரும், முதல்-அமைச்சரும் பேசும்போது, நாட்டையும், கலாசாரத்தையும் முதன்மைப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள்.

எனவே தமிழக அரசுக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மிக அருமையாக தொடக்கவிழாவை நடத்தி இருக்கிறார்கள். கவர்னர் மாளிகையில் பிரதமரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. சும்மா சந்தித்துப் பேசினோம்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் பிரதமரிடம் ஆசி பெற்றார்கள் தவிர வேறொன்றும் இல்லை. இன்றைக்கு பிரதமரிடம் அரசியல் பேசும் சூழல் இல்லை. பிரதமர் மிகவும் உற்சாகமாக இருந்தார். கட்சி நிர்வாகிகள் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி கேட்டார். அவருடைய பழைய தொடர்புகள், பால்ய நண்பர்கள் பற்றி விசாரித்தார். ஜனசங்கம் காலத்தில் வேலை பார்த்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் பிரதமரை பார்த்தார்கள்.

கடந்த முறை பிரதமர் சென்னை வந்தபோது, தமிழக முதல்-அமைச்சர் பெருந்தன்மையோடு நடந்திருக்க வேண்டும். அரசியல் பேசுகிற இடம் இல்லை என்றும் நான் சொல்லி இருந்தேன். ஆனால் இன்றைக்கு முதல்-அமைச்சரை பாராட்டுகிறேன். ஏனென்றால் இந்தியாவை, நம்முடைய கலாசாரத்தை பெருமைப்படுத்தும்விதமாக தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறது.

எனவே முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் பா.ஜ.க.வின் தனிப்பட்ட பாராட்டுகள் உண்டு. ஒரு நிகழ்ச்சியை நன்றாக செய்திருக்கிறார்கள் என்று பாராட்டினால், கூட்டணி என்றெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது. பா.ஜ.க. கொள்கைரீதியான கட்சி. தனது கொள்கையை எப்போதும் மாற்றிக்கொள்ளாது. இவ்வாறு அவர் கூறினார்.