அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களித்தவர்களுக்கு கருத்து தெரிவிக்க ஆளும் கட்சி சந்தர்ப்பம் வழங்கவில்லை – ஆளும் கட்சி உறுப்பினர் கொடஹேவா குற்றச்சாட்டு

178 0

அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்த ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு, அதுதொடர்பில் இடம்பெறற பாராளுமன்ற விவாதத்தில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கவில்லை. என்றாலும் நாங்கள் எடுத்த தீர்மானம் சரி என்பதை வரலாறு தீர்மானிக்கும் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் நாலக்க கொடஹேவா தெரிவித்தார்.

அவசரகால சட்ட பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்க எடுத்த தீர்மானம் குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அவசரகால சட்ட பிரேரணை மீதான விவாதம் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஆளும் கட்சியில் சில உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர்.

தாங்கள் ஏன் எதிர்த்து வாக்களிக்கின்றோம் என்பதை விளக்குவதற்காகவும் தற்போதுள்ள நிலைமையில் அவசரகால சட்டத்தை அமுல் படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பாகவும் கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு ஆளும்கடசியின் பிரதம கொறடாவிடம் நேரம் கேட்டிருந்தோம்.

என்றாலும் விவாதத்தில் அவசரகால சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு யாருக்கும்  இடமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் சாதாரண சட்டத்தையும் துஷ்பிரயோகம் செய்து, பாரியளவிலான அரசியல் மாற்றுக்கருத்துடையவர்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறான வரலாறு உடைய ஆட்சியாளர்களின் கைகளுக்கு, அவசரகால சட்டம் போன்ற ஆயுத்தை வழங்குவது மிகவும் பயங்கரமானதாகும். அதனாலே அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்தேன்.

மேலும் அவசரகால சட்டத்துக்கு மறைந்திருந்து அனைத்துவகையான எதிர்ப்பு போராட்டங்களையும் அடக்குவதற்கு முடியுமான சூழலை ஏற்படுத்திக்கொள்ளவதற்கு அரசாங்கத்துக்கு இடமளிப்பது என்பது, மக்கள் பிரதிநிதி என்வகையில் பாெறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகும். எனவே அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு நாங்கள் எடுத்த தீர்மானம் சரி என்பதை வரலாறு தீர்மானிக்கும் என்றார்.