பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் விடுதலையாகியுள்ளார்.
இவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆண்டு இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (29) ஒரு இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரிரப்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு பிணையிலும் விடுதலையாகியுள்ளார்.
கணவதிப்பிள்ளை மோகன் இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், கடந்த மே மாதம் 3 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம், சின்னத்துரை ஜெகன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை ஆஜராகி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்நகர் பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து, சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத்தின் வழக்கு விசாரணைக்கு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

